சென்னை : விஜய் டிவியின் முதன்மை மற்றும் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடர் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது.
பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்யும் கோபி, ஒரு காபிக்குகூட பாடாய் படும் நிலையை சுவாரஸ்யமான சம்பவங்களுடன் காட்சிப் படுத்தியுள்ளது தொடர்.
பாக்கியாவின் அருமையான சமையலை ருசிப் பார்த்து பழகிய கோபி, ராதிகாவின் சமையலை சாப்பிட முடியாமல் தவிக்கிறார். ஆசையும் மோகமும் முடிந்தநிலையில், அவரது மனம் ருசிக்கு ஏங்கிப்போய் நிற்கிறது.
தன்னை மறந்து பாக்கியாவிடமிருந்து காபியை எடுக்கும் கோபி : விஜய் டிவியின் நம்பர் ஒன் தொடராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்த தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. டிஆர்பியிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இந்தத் தொடர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. கோபி, பாக்கியா, ராதிகா என மூன்று லீட் கேரக்டர்களை வைத்துக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையையும் அவர்களையொட்டிய உறவுகளின் நிலைப்பாட்டையும் மையமாக கொண்டு இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது.
தன்னுடைய முதல் மனைவி, பெற்றோர், மூன்று பிள்ளைகள் என சிறப்பான வாழ்க்கையை மேற்கொண்டுவரும் கோபிக்கு தான் நினைத்த வாழ்க்கையை தான் வாழவில்லை என்பது ராதிகாவை பார்க்கும்போதுதான் தோன்றுகிறது. தொடர்ந்து பாக்கியாவை ஏமாற்றி அவருக்கு விவாகரத்து கொடுக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் கோபி -ராதிகா உறவு குறித்து அறியும் பாக்கியா, தானே முன்வந்து கோபிக்கு விவாகரத்து கொடுக்கிறார்.
அங்கிருந்துதான் அவரது வளர்ச்சி துவங்குகிறது. கோபி வீட்டை விட்டு வெளியேறும்படி செய்யும் பாக்கியா, அவர் அந்த வீட்டிற்கு செலவு செய்த லட்சக்கணக்கான பணத்தையும் கொடுக்கும் சவாலையும் ஏற்கிறார். அதில் சில வாரங்களிலேயே 2 லட்சம் ரூபாயை கொடுத்து அதிர்ச்சியும் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது வளர்ச்சியை பார்த்து கோபி மற்றும் ராதிகா இருவரும் பொறாமை படுகின்றனர். ராதிகா அலுவலகத்திலேயே கேன்டீன் கான்டிராக்ட்டை பாக்கியா ஏற்க, அவரை அங்கிருந்து துரத்த சூழ்ச்சிகள் செய்கிறார் ராதிகா.
அவற்றையெல்லாம் முறியடித்து தொடர்ந்து கேன்டீன் கான்டிராக்ட்டை சிறப்பாக செய்கிறார் பாக்கியா. ஆங்கிலம் கற்க வகுப்பிற்கும் செல்கிறார். அங்கு பழனிச்சாமி உள்ளிட்டவர்களின் நட்பும் கிடைக்கிறது. அவர்களும் பாக்கியாவின் வெற்றிக்கு துணையாக நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் அதிகமாக குடிக்கும் கோபி, பாக்கியாவின் வீட்டிற்கே வர, கூடவே இலவச இணைப்பாக ராதிகாவும் வருகிறார். இதனால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதனிடையே ராதிகாவை திருமணம் செய்த கோபி, ஆசையும் மோகமும் தீர்ந்த நிலையில், அடுத்ததாக சுவையான சமையலுக்கு ஆளாய் பறக்கிறார். விதவிதமாக ருசியாக பாக்கியா கையால் சாப்பிட்ட அவருக்கு, ராதிகாவின் சமையல் பிடிப்பதில்லை. அவர் போடும் காபியில் வாழ்க்கையையே வெறுத்துவிடுகிறார். ஆனால் பாக்கியா போடும் காபியில் தன்னையே மறக்கிறார். அப்படி ஒருமுறை, பாக்கியா அனைவருக்கும் காபி கொடுக்க, அதை தன்னை மறந்து எடுத்து குடிக்கவும் போகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அப்போது உடனடியாக நினைவு வந்து, மீண்டும் காபியை ட்ரேயிலேயே வைத்துவிட்டு, அனைவரும் தன்னுடைய செயலை பார்த்ததை, பார்த்துவிட்டு அவமானத்துடன் மாடியேறி செல்கிறார். அங்கு ராதிகா, தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து தன்னுடைய புலம்பலை தொடர்கிறார். தன்னுடை அவமானத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் எப்படி தூங்குகிறாள் என்று ராதிகாவை பார்த்து அங்கலாய்க்கிறார். தொடர்ந்து அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்றும் கூறுகிறார்.