Ilayaraaja – இளையராஜா குடும்பத்தில் சோகம்.. சகோதரர் மகன் மறைவு

சென்னை: Ilayaraaja (இளையராஜா) இளையராஜாவின் சகோதரர் மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜா ஒருவர். அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக இப்போதும் களத்தில் இருந்துவருகிறார் இளையராஜா. அவர் வந்த பிறகுதான் நாட்டுப்புற இசையும், கிராமத்து சத்தங்களும் தமிழ் சினிமா இசைக்குள் வந்தன என பலர் கூறுவது உண்டு.

பண்ணைபுரம் என்ற கிராமத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் அனைத்துவிதமான இசையையும் முறையாக கற்று மேஸ்ட்ரோ பட்டம் வாங்கியவர். இளையராஜாவின் இசை தலைமுறைகள் தாண்டி ரசிக்கப்படுகிறது.

இளையராஜா இசையமைத்த விடுதலை: இளையராஜா கடைசியாக வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் படத்தில் இடம்பெற்றிருக்கும் உன்னோடு நடந்தா, காட்டுமல்லி, அருட்பெருஞ் ஜோதி ஆகிய பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் சில விமர்சனங்களையும் விடுதலை படத்தின் இசை மூலம் அவர் சந்தித்தார்.

ஏன் மாஸ் பிஜிஎம்?: விடுதலை படத்தை பார்த்த பலர் இளையராஜாவின் இசையை சிலாகித்தாலும் ஒரு சிலர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். குறிப்பாக ஊருக்குள் புகுந்து பார்ப்பவர்களை எல்லாம் காவல் துறை என்கவுன்ட்டர் செய்யும்போது இளையராஜா எதற்காக மாஸ் பிஜிஎம்மை போட்டார் என கேள்வி எழுப்பும் ரசிகர்கள், பல இடங்களில் பின்னணி இசை ஒத்துவரவே இல்லை எனவும் தெரிவித்தனர்.

இளையராஜா பேசினாலே சர்ச்சைதானா?: இப்படி இசையமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த மற்றும் விமர்சனத்தை சந்திக்கும் இளையராஜா மீது அதே ரசிகர்களில் ஒரு தரப்பினர் விமர்சனங்களும் வைப்பதுண்டு. இளையராஜா யாரையும் மதிக்கமாட்டார், அவருக்கு தலைக்கணம் அதிகம் பலர் கூறுவார்கள்.

சமீபத்தில் நடந்த விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, ‘மைக்கை போட்டுட்டு போயிடுவேன்’ என இளையராஜா சொன்னது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இளையராஜாவின் கோபத்தை பேசும் பலர் அவர் ஏன் அப்படி கோபப்படுகிறார் என்பதை பேசுவதில்லை என ராஜாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

பாவலர் சிவா மரணம்: இந்நிலையில் இளையராஜாவின் குடும்பத்தில் சோகமான நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது. அதாவது இளையராஜாவின் சகோதரன் மகனான பாவலர் சிவா உயிரிழந்திருக்கிறார். பாவலர் வரதராஜனின் மகனான அவர் இளையராஜாவின் இசைக்குழுவில் இருந்தார். சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் பாண்டிச்சேரியில் இருந்த அவர் இன்று உயிரிழந்தார். அவரது மரணம் இளையராஜாவின் குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பாரதிராஜா இரங்கல்: சிவாவின் மரணத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “பேரன்பு கொண்ட சிவா உனது மறைவு பேரதிர்ச்சியாக உள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது உன்னை இழந்து வாடும் பாவலர் சகோதரர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

இளையராஜா வாழ்க்கையில் பாவலர் வரதராஜன்: இளையராஜாவின் வளர்ச்சியில் அவரது மூத்த சகோதரரான பாவலர் வரதராஜன் முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய ஆரம்பகாலத்தில் பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் பிரதர்ஸ் என்ற க்ரூப்பில்தான் வாசிக்க ஆரம்பித்தார் இளையராஜா. பல கம்யூனிச மேடைகளில் இந்த குரூப் வாசித்திருக்கிறது. பாவலர் வரதராஜன் 1973ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.