Mann Ki Baat 100: ரேடியோ உரையால் பிரதமர் மோடி சாதிப்பதுதான் என்ன?!

பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் மன் கி பாத் உரையின் 100-வது நிகழ்ச்சியை வெற்றிகரமாகக் கடந்திருக்கிறார். 2014-ம் ஆண்டு முதன் முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை, `மன் கி பாத்’ (மனதின் குரல்) எனும்பெயரில் நாட்டு மக்களுடன் ரேடியோ மூலமாக உரையாற்றி வருகிறார். அதன் 100-வது உரை நிகழ்ச்சி ஏப்ரல் 30-ம் தேதி, ஐ.நா முதல் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு இடங்களிலும் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கான இடங்களில் பிரதமர் மோடியின் 100-வது உரை ஒளிபரப்பப்பட்டது.

`மன் கி பாத்’ (மனதின் குரல்)

இந்த நிலையில், பிரதமர் மோடியின் `மன் கி பாத்’ உரையால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன… இதனால் என்ன சாதிக்கிறார் பிரதமர் மோடி… உள்ளிட்டக் கேள்விகளை பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசனிடம் முன்வைத்தோம். நம்மிடம் பேசியவர், “பிரதமரின் மனதில் உதித்த ஒரு புதுமையானத் திட்டம் மன் கி பாத். வடகிழக்கு மாநிலங்கள் முதல் தார் பாலைவனம் வரை, கார்கில் பனிப்பிரதேசம் முதல் கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் வரை அனைத்துப் பகுதி மக்களையும் ரேடியோ மூலம் சென்றடைந்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த உரையின் வாயிலாக சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் செய்யும் நல்ல விஷயங்களைக்கூட பொதுவெளியில் பாராட்டிப் பேசுகிறார். பொதுவாக தேசத்தின் பெருமையை சமூக அடுக்கின் மேல்தட்டில் இருப்பவர்களைப் பற்றி பேசியே மாய்ந்துபோகிறோம். ஆனால் பிரதமர் மோடி சமூக அடுக்கின் கீழே இருக்கும் மக்கள் எப்படி சிறப்பாக இருக்கின்றார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறார்.

ஒரு மண்பானை செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளி, மரம்வைக்கும் மூதாட்டி, வாழைநாரில் கைவினைப்பொருள்கள் செய்யும் பெண்மணி என எளிய மக்களைப் பற்றிப் பேசுகிறார். ஜனநாயகத்தின் வளர்ச்சி என்பது தவறுசெய்பவர்களை தட்டிக்கேட்பது மட்டுமல்ல, நன்மை செய்பவர்களை தட்டிக்கொடுப்பதும்தான் என்றவகையில் பிரதமர் மோடி நன்மை செய்யும் எளிய மக்களைத் தட்டிக்கொடுக்கிறார். இது அந்த மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தையும் பெரும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் வேர்களுக்கு இருக்கின்ற பெருமை வெளி உலகுக்கு தெரிந்திருக்கிறது. பிரதமரின் ஆளுமைக்கு இருக்கும் வசீகரம் மக்களை ஈர்த்திருக்கிருக்கிறது. இதற்கெல்லாம் மன் கி பாத் உரையின் மூலம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இராம ஸ்ரீனிவாசன்

அதேபோல பிரதமர் மோடியின் மன் கி பாத் உரை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவிடம் கருத்து கேட்டோம். “பிரதமர் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு தன் கருத்துகளைக் கூற மன் கி பாத்தை பிரதமர் மோடி பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் பல கருத்துகளைக் கூறிவருகிறார். ஆனால், அவரது உரையின் பேச்சுக்கும், செயலுக்கும் சம்மந்தமே கிடையாது. மக்களுக்காகப் பேசுகிறார் என்றால், டெல்லியில் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஓராண்டாக விவசாயிகள் போராடினார்களே… அவர்களைச் சந்தித்து, `உங்களின் பிரச்னை என்ன?’ என்று கேட்டாரா பிரதமர் மோடி. குறைந்தபட்சம் வேளாண்துறை அமைச்சரையாவது அங்கு அனுப்பிவைத்தாரா… இல்லை;

இப்போதும் மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பிரச்னையை காதுகொடுத்து கேட்கக்கூட பிரதமர் மோடி தயாராக இல்லை! ஆனால் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் கேட்டனர். அவர்களுடன் அமர்ந்து அவர்களின் பிரச்னையைக் கேட்டு ஆறுதல்சொல்லி ஆதரவளித்தனர்.

கோபண்ணா

1977-ல் பீகார் மாநிலம், பெல்சியில் 10-க்கும் மேற்பட்ட தலித் மக்கள், மாற்றுச் சாதி நிலபிரப்புகளின் அடியாள் படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது கனமழை, ஆற்றில் வெள்ளம், சேரும் சகதியுமான பாதை என பல்வேறு தடைகளைத்தாண்டி 10 கி.மீட்டருக்குமேல் யானைமீது அமர்ந்துசென்று பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார் இந்திரா காந்தி!

அந்த மக்களுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித்தந்தார். ராஜீவ் காந்தியும் அதைத்தான் செய்தார். அந்த வரிசையில் பாரத் ஜோடோ யாத்திரையின்மூலம் நாட்டு மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி. அவர் மக்களோடு உரையாடினார் அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். இதற்கெல்லாம் மூலக்காரணம், `எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்குசென்று மக்களுக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்கவேண்டும்’ என்கிற நேரு குடும்பத்தின் பாரம்பர்யம்தான்.

ராகுல் காந்தி – மோடி

ஆனால், பிரதமர் மோடியோ தொலைக்காட்சியிலும் மன் கி பாத் ரேடியோவிலும் பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர மக்களை நேரில் சந்திக்கத் தயாராக இல்லை. ஒரு நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஜனநாயக உணர்வு இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் தேவைக்கு அதிகமாகவே எம்.பி-க்களைப் பெற்றிருக்கிறார். ஆனால், அவர் ஒரு `நாடாளுமன்ற ஜனநாயகவாதி’யா என்றால் இல்லை! மோடிமீது மக்களுக்கு நம்பகத்தன்மை கிடையாது. காரணம் மோடி ஒரு ஜனநாயகவாதி இல்லை! மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சர்வாதிகாரி!” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.