நியூயார்க்: Met Gala (மெட் காலா 2023) அமெரிக்காவின் நியூயார்க்கில் தொடங்கிய மெட் காலா ஃபேஷன் நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த ப்ரியங்கா சோப்ரா, இஷா அம்பானி, ஆலியா பட் ஆகியோர் அசத்தலான உடையில் பங்கேற்றனர்.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் வருடா வருடம் மே 1ஆம் தேதி மெட் காலா என்ற ஃபேஷன் நிகழ்ச்சி நடக்கும். மாலை தொடங்கி நள்ளிரவுவரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் புதுமையான உடைகள் அணிந்தபடி ரெட் கார்ப்பெட்டில் வலம் வருவார்கள். ஒரே நிகழ்ச்சியில் உலக நாடுகளின் பிரபலங்கள் சங்கமிப்பதால் இந்நிகழ்ச்சியை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
கோலாகலமாக தொடங்கிய மெட் காலா 2023: ஆண்டுதோறும் தவறாமல் நடக்கும் இந்த நிகழ்ச்சி கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு மட்டும் நடைபெறவில்லை. இந்தச் சூழலில் 2023ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. டிசைனர் கார்ல் லாகர்ஃபெல்ட்டிற்கு அஞ்சலி என்ற கருப்பொருளோடு இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி தொடங்கியது.
மெட் காலாவில் இந்திய பிரபலங்கள்: மெட் காலா 2023 நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து ப்ரியங்கா சோப்ரா, ஆலியா பட், முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி கலந்துகொண்டனர். ப்ரியங்கா சோப்ரா, இஷா அம்பானி உள்ளிட்டோர் இதற்கு முந்தைய மெட் காலாவில் கலந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் ஆலியா பட் கலந்துகொள்ளும் முதல் மெட் காலா நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
அசத்திய ஆலியா பட்: பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் உடைகள் விஷயத்தில் வித்தியாசத்தையும், புதுமையையும் கொண்டிருப்பவர் ஆலியா பட். எனவே ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியில் முதல்முறையாக அவர் கலந்துகொண்டதால் எந்த மாதிரியான உடையை அவர் அணிவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்க்ளிடம் எழுந்தது.
அவர் இந்த நிகழ்ச்சிக்காக பிரபால் குருங் வடிவமைத்த வெள்ளை நிற கவுனுடன் தேவதை போல் காட்சியளித்தார். மேலும் அதிக மேக்கப்கள் எதுவும் போட்டுக்கொள்ளாமல் தனது இயல்பான அழகுடன் அவர் தோன்றியது பலரையும் ரசிக்க வைத்தது.
கணவருடன் ப்ரியங்கா சோப்ரா: பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் கலந்துகொண்டார். ப்ரியங்கா கறுப்பு நிற கவுனுடனும், அவரது கணவர் நிக் ஜோனாஸ் கறுப்பு நிற கோட் ஷூட்டுடன் அசத்தலாக ரெட் கார்ப்பெட்டில் வலம் வந்தனர்.
சில வருடங்களுக்கு முன்னர் நடந்த மெட் காலாவில் ப்ரியங்கா சோப்ரா அதீத மேக்கப்புடனும், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் கலந்துகொண்டார். ஆனால் அந்தப் புகைப்படத்தை நடிகர் யோகிபாபு ஹேர் ஸ்டைலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்ஸ் கடுமையாக ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இஷா அம்பானியின் காஸ்ட்யூம்: பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியும் கலந்துகொண்டார். அவர் இந்திய பாரம்பரிய உடையான புடவையில் கலந்துகொண்டார். கறுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த புடவையில் வெஸ்டர்ன் ஸ்டைலும் கொஞ்சம் எட்டிப்பார்த்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இஷாவுக்கான உடையையும் காஸ்ட்யூம் டிசைனர் பிரபால் குருங்கே வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.