‘ஆஸ்மா’, ‘தி லாஸ்ட் மாங்க்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் மே 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றி இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாற்றி அவர்களை ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துவிடுவதாக இப்படத்தின் ட்ரெய்லரில் காட்சிப்படுத்தப்படுகிறது. மேலும், இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது.
இக்கதை உண்மைக்குப் புறம்பானது என்றும் மத வெறுப்பை ஏற்படுத்தி மக்களின் நல்லிணக்கத்தை உடைக்கும் திட்டத்தோடு எடுக்கப்பட்டிருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தை கேரளாவில் வெளியிட பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “மதச்சார்பற்ற மண்ணான கேரளத்தை, மதத் தீவிரவாதத்தின் மையமாகக் காட்டுவதற்கான சங் பரிவாரின் அஜண்டாவை இந்த சினிமா பரப்புகிறது என்பதை ட்ரெய்லர் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது” என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கேரளா முஸ்லீம் யூத் லீக் இயக்கம் இந்த விவகாரம் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் சொல்லப்பட்டுள்ளது உண்மை என நிறுபிப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்” என சவால் விடுக்கப்பட்டள்ளது. இதுகுறித்து கேரளா முஸ்லீம் யூத் லீக்கின் பொதுச் செயலாளர் பி.கே. பிரோஸ், “32 ஆயிரம் பெண்களை மதமாற்றம் செய்ததாகக் கூறியுள்ளீர்கள். அதன்படி பார்த்தால் கண்டிப்பாக ஒரு பஞ்சாயத்தில் இருந்து 30 பேராவது இருப்பார்கள். அவர்களில் ஒருவரின் முகவரி கேட்டால் கூட உங்களுக்குத் தெரியாது. ஆதலால் இதை நிரூபிக்க உரிய ஆதாரத்தைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.