Vijay: “விஜய் அண்ணா நான் பணம் தர்றேன்னு சொன்னார்;ஆனா, நாங்கதான்…"-விஜய் சந்திப்பின் பின்னணி

‘விஜய் விலையில்லா விருந்தகம்’ தொடங்கி, காலை நேரத்தில் பசியோடு வருவோருக்கு இலவசமாக உணவு கொடுத்து பசியாற்றிவரும் விஜய் மக்கள் இயக்கத்தினரை நேரில் சந்தித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய்.

இதனால், இன்னும் கூடுதல் உற்சாகத்துடன் ஏழை எளிய மக்களுக்கு விருந்தளிக்க தயாராகிக் கொண்டிருக்கிறவர்களிடம் பேசினேன். வடசென்னை மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கக் தலைவர் தணிகாசலத்திடம் பேசினேன்.

“தமிழ்நாடு முழுக்க 20 இடங்களில் விஜய் விலையில்லா விருந்தகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. வடசென்னையில்தான் முதன் முதலில் விஜய் விலையில்லா விருந்தகத்தைத் தொடங்கினோம். நான் 20 வருஷமா விஜய் ஃபேன். இயக்கத்தின் மூலமா மக்களுக்கு நல்லது செய்யணும்னு விஜய் சார் சொல்வார். புஸ்ஸி ஆனந்த் சார் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துறார். இதன்மூலமாதான், ஆர்.கே. நகர்ல 200 நாட்களுக்குமேல விலையில்லா விருந்து அளிச்சிக்கிட்டிருந்தோம்.

அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன் எம்.டி.சி.என் தணிகா

அதுக்கப்புறம்தான், கொளத்தூர் பகுதியில கடந்த 518 நாட்களுக்கு மேலாக உணவு கொடுத்துக்கிட்டிருக்கோம். நான், அரசு பஸ் டிரைவரா இருக்கேன். அதுல வர்ற வருமானத்தையும் நண்பர்களின் உதவியாலயும்தான் விஜய் மக்கள் இயக்கம் சார்பா இந்த சேவையை சேஞ்சுக்கிட்டிருக்கேன். பணம் கொடுப்பது, சமைப்பது என்று இதுக்கு, நண்பர்களும் பெரிய உதவியா இருக்காங்க.

கொளத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தினமும் காலையில, 8 மணிக்கு ஏழை மக்களுக்கு இலவசமா உணவு கொடுக்கிறோம். கூலிவேலைக்கு போறவங்கதான் இங்க அதிகமா வசிக்கிறாங்க. வீடில்லாத ஏழைங்க, கூலிவேலைக்குச் செல்பவர்கள் எல்லோரும் வந்து வயிறார சாப்ட்டுப் போறாங்க. ஒருநாளைக்கு இட்லி, ஒரு நாளைக்கு பொங்கல், இன்னொரு நாளைக்கு பிரிஞ்சின்னு காலை உணவுகள் கொடுப்பதோடு ஞாயிற்றுக்கிழமை காலை பால், முட்டையும் கொடுக்கிறோம். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாம மக்கள் சாப்பிடணும்னுதான் கொடுத்துக்கிட்டிருக்கோம்.

விஜய் விலையில்லா விருந்தகம்

‘போக்கிரி’ படத்துல வர்ற ‘ஆடுங்கடா என்ன சுத்தி’ பாடலில் “பச்ச புள்ள பிஞ்சு வெரல் அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா, முந்தாணியில் தூளி கட்டும் தாய்மாரே நீ கொஞ்சம் தள்ளி வெச்சா, ஆத்தா உன்ன மன்னிப்பாளா’ன்னு விஜய் அண்ணன் பாடி நடிச்சிருப்பாரு. அப்படியே உடம்புக்குள்ள முறுக்கேறும். அந்த மாதிரி ஏழைங்களை தள்ளி வைக்கக்கூடாதுன்னுதான் அவங்களுக்கு வயிறார காலை நேரத்துல உணவு கொடுத்திட்டிருக்கோம். குறிப்பா, ஸ்கூல் பிள்ளைங்கதான் அதிகமா வந்து சாப்பிட்டு போறாங்க. டிஃபன் பாக்ஸுல வாங்கிட்டு போறாங்க. இப்படி, வயிறார சாப்பிடுறதால அவங்க ஸ்கூலுக்கு போயி நல்லா படிப்பாங்க.

தமிழ்நாடு முழுக்க 20 இடங்களில் புஸ்ஸி ஆனந்த் சார் வழிகாட்டுதலில் நாங்க தொடர்ந்து உணவளிச்சிக்கிட்டு வர்றோம். எங்களோட இந்த சேவையைப் பார்த்துட்டு விஜய் சார் நேர்ல கூப்பிட்டு பாராட்டினார். அதுக்காகத்தான் அந்த சந்திப்பு. ஒவ்வொருத்தர்க்கிட்டேயும் பத்து நிமிஷத்துக்குமேல பேசினார். ‘என்னென்ன மாதிரி சேவைகளை செய்றீங்க’ன்னு கேட்டார். ‘நீங்க ஏன் பணம் செலவு பன்றீங்க? நான், தர்றேன்’னு சொன்னார். நாங்க வேணாம்னு சொல்லிட்டோம்.

விஜய் விலையில்லா விருந்தகம்

நாங்களே அதை செஞ்சாதான் எங்களுக்கு ஆத்மார்த்தமா இருக்கும்னு சொல்லிட்டோம். அப்புறம், அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மாலை போட்டதையும் சொன்னோம். எல்லாத்தையும் புன்னகையோட கேட்டுக்கிட்டு தொடர்ந்து பண்ணுங்கன்னு ஊக்கப்படுத்தி அனுப்பினார். முன்பைவிட அதிகமா விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கோம்” என்கிறார்.

இவரைப்போலவே சென்னை திருவான்மியூர் பகுதியிலும் விஜய் விலையில்லா விருந்தகத்தை நடத்திவருகிறார் விஜய் மக்கள் இயக்க தென் சென்னை மாவட்ட தலைவர் கே.வி. தாமு. “தினமும் 100 பேருக்குமேல இங்க காலை உணவு கொடுக்கிறோம். வேளச்சேரி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, திருவெல்லிக்கேணி பகுதிகளிலிருந்து விஜய் மக்கள் இயக்க நண்பர்களும் எங்களுக்கு உதவியா இருக்காங்க. கொரோனா இரண்டாவது ஊரடங்கின்போது ஆரம்பித்து இப்போதுவரைக்கும் உணவளிச்சிக்கிட்டிருக்கோம். வயிறார சாப்பிட்டு எங்களையும் விஜய் சாரையும் பாராட்டிட்டு போறாங்க. ” என்கிறார் உணர்ச்சி பொங்க.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.