இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி, 2023ஆம் ஆண்டு, மார்ச் 28ஆம் தேதியிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, செஷன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஷமிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை மேற்கு வங்காளத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியின் மனைவி, ஷமி தன்னிடம் வரதட்சணை கேட்பதாக கூறி, அவரது வழக்கறிஞர்கள் தீபக் பிரகாஷ், வழக்கறிஞர் நச்சிகேதா வாஜ்பாய் மற்றும் திவ்யங்னா மாலிக் வாஜ்பாய் ஆகியோர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
2019இல் வாரண்ட் பிறப்பிப்பு
பாலியல் தொழிலாளிகளுடன், குறிப்பாக பிசிசிஐ சுற்றுப்பயணங்களின் போது, பிசிசிஐ வழங்கிய ஹோட்டல் அறைகளில், இன்றுவரை கூட, சட்டவிரோதமான திருமணத்திற்குப் புறம்பான பாலியல் உறவுகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார் என குற்றஞ்சாட்டியுள்ளார். மனுவின்படி, ஷமிக்கு எதிராக அலிபூர் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
2019, செப்டம்பர் 9 அன்று, கைது வாரண்ட் மற்றும் குற்றவியல் விசாரணையின் முழு நடவடிக்கைகளையும் நிறுத்திவைத்த செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை, ஷமி எதிர்த்து மனு தாக்கல் செய்தார். இதன் விளைவாக, ஷமியின் மனைவி கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார். ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த உத்தரவையும் அங்கு பெற முடியவில்லை.
சிறப்பு சலுகைகள் கூடாது
இந்தாண்டு, மார்ச் 28ஆம் தேதியிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார். குற்றஞ்சாட்டப்பட்ட உத்தரவு சட்டத்தில் வெளிப்படையாக தவறானது, இது விரைவான விசாரணைக்கான உரிமையை அப்பட்டமாக மீறுவதாக அவர் கூறினார்.
ஷமியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டத்தின் கீழ் பிரபலங்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படக்கூடாது என்று கவலை தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக, வழக்கு விசாரணை முன்னேற்றம் அடையாமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் ஒருதலைப்பட்சம்
“தற்போதைய வழக்கின் குற்றவியல் விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக, எந்தவித மூகாந்திரமும் இல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதி, கிரிமினல் விசாரணைக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவேயில்லை.
கைது நடவடிக்கை, வாரண்டுக்கு எதிராக மட்டுமே அவர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. எனவே, செஷன்ஸ் நீதிமன்றம் தவறான மற்றும் ஒருதலைபட்சமான முறையில் செயல்பட்டது. இதன் காரணமாக மனுதாரரின் உரிமைகள் மற்றும் நலன்கள் பலவிதமாக பாதிப்புள்ளாகி, அநீதிக்கு இட்டுச்செல்லும்” என்று ஷமியின் மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளது.