சென்னை: இயக்குநரும் நடிகருமான மனோ பாலாவுக்கு இரு விஷயங்கள் பாதித்ததாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான மனோபாலா எப்போதும் கலகலப்பாக இருப்பவர். அவர் பெரிய விஷயங்களுக்கு கோபப்படவே மாட்டாராம். ஆனால் சிறிய விஷயங்களுக்குத்தான் கோபம் வரும் என்கிறார்கள். எந்த சீனை எப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்.
அதற்கேற்ப அவர் இயக்குவார். பன்முகத் திறமைகளை கொண்ட இயக்குநர் மனோபாலா, கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். அவருடைய இறப்பை அடுத்து அவர் ஏற்கெனவே பேசிய பல விஷயங்கள் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் அவர் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் டென்ஷனை குறைக்கவும் கையாளும் முறைகளையும் சொல்லியிருக்கிறார். அதில் மனோபாலா கூறுகையில், எனக்கு இரு விஷயங்கள்தான் அதிக மன அழுத்தத்தை கொடுத்தன. அவற்றில் ஒன்று ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களின் நிலை. வாழ்வாதாரத்துக்காக கடலில் போராட வேண்டிய நிலையில் மீனவர்கள் இருக்கிறார்கள்.
படகோட்டி படத்தில் எம்ஜிஆர் பாடிய தரை மேல் பிறக்க வைத்தான் பாடல் போல் உள்ளது அவர்களுடைய வாழ்க்கை. அது போல் இன்னொரு விஷயம். அனிதாவின் மரணம். தேவையில்லாமல் ஒரு அப்பாவி பெண் வாழ்க்கையோட விளையாடிட்டாங்க. அந்த பொண்ணு என்ன பண்ணிச்சு, நீட் தேர்வை கொண்டு வாங்க யார் வேண்டாம் என சொன்னது, அடுத்த மாதம் கொண்டு வரலாமே.
அதுக்கு தகுந்த மாதிரி அனிதா மாதிரி இருக்கும் பொண்ணுங்க தயாராகிட்டு இருப்பாங்களே. திடுதிப்புன்னு அறிவித்துவிட்டு மாணவர்களை தேவையில்லாம அலைக்கழிச்சிட்டாங்களே என மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். சமூக நலம் சார்ந்த கருத்துகளை அவ்வப்போது தெரிவிப்பார். அவர் சாய்பாபாவின் தீவிர பக்தராம்.
ஷூட்டிங் இல்லாத சமயங்களில் மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்கு செல்வார். அது போல் ஏ.எம். ரத்னம் கட்டிய பாபா கோயிலில் போய் அமைதியாக உட்கார்ந்துவிடுவார். அது போல் வடபழனியில் குபேர சாய்பாபா கோயிலுக்கும் செல்வார். ராமகிரியில் காலபைரவர் கோயிலுக்குப் போவதையும் அவர் வழக்கமாக கொண்டிருந்தார். காரில் உட்கார்ந்து கொண்டு பயணிக்கத் தொடங்கினால் அவருடைய மனம் ரிலாக்ஸ் ஆகும் என்றும் கூறுகிறார்கள்.