சேலம்: ”அமமுகவில் இருந்து இன்னும் 4 பேர் அதிமுகவுக்கு வந்தால், அக்கட்சியின் கூடாரம் காலியாகிவிடும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது: ”இன்னும் 10 நாட்களுக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்து விட வேண்டும். நான் பொதுச் செயலாளரான பிறகு 90 ஆயிரம் பேர் மற்ற கட்சியில் இருந்து விலகி, நமது கட்சியில் இணைந்துள்ளனர்.
நாம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதான் எம்ஜிஆர் கட்சியை தோற்றுவித்தார். ஜெயலலிதா, சேவல் சின்னத்தில் போட்டியிடும்போது, சேவல் சின்னத்துக்கு எதிராக போட்டியிட்ட நபர்களுக்கு உதவியாக இருந்தவர் ஓபிஎஸ். அவர் மூன்று முறை முதல்வராக இருந்தேன் என்று கூறிக்கொள்கிறார். ஆனால், அவர், என்னிடம் கட்சிக்கு வந்து விடுவதாக தூது விட்டார். அதற்கு தலைமை கழக நிர்வாகிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது, அவர் எந்த நீதிமன்றதுக்கு சென்றாலும் வெற்றிபெற முடியாது.
தேர்தல் ஆணையம் தெளிவான தீர்ப்பை நமக்கு வழங்கியுள்ளது. ஓபிஎஸ் இல்லை, வேறு எவராலும் அதிமுக-வை ஒன்றும் செய்ய முடியாது. அமமுக கூண்டோடு காலியாகி, ஒவ்வொருவராக நமது கட்சிக்கு வந்து கொண்டுள்ளனர். அமமுக-வில் இருந்து இன்னும் 4 பேர் அதிமுக-வுக்கு வந்தால், அக்கட்சியின் கூடாரம் காலியாகிவிடும்.
பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் தான் என்னை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், ஓபிஎஸ் பொதுக்குழு செல்லாது என கூறுகிறார். இவரை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்ததே, அந்த பொதுக்குழு உறுப்பினர்கள்தான். இவரை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுத்தால் அது செல்லும், என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தால் அது செல்லாது என்கிறார். ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருக்கும் வரை நமக்கு கவலையில்லை. அவர்கள் இருவருமே அக்கட்சியின் வீழ்ச்சியைப் பார்த்துக்கொள்வார்கள்.
நமது கட்சியில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணியை சரியாக செய்தாலே, வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்” என்று அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்எல்ஏ பாலசுப்பிரமணியம். நிர்வாகிகள் பன்னீர்செல்வம். செல்வராஜ், சக்திவேல், சவுண்டப்பன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.