“அரசியல் அட்ரஸ் இல்லாத அண்ணாமலை; என் தகுதிக்கு அவரை பற்றி பேசக் கூடாது” – சாடிய டி.ஆர்.பாலு

தஞ்சாவூர் திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் தி.மு.க பொருளாளரும், பாராளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவினர் நடத்திய கூட்டம்

சில வாரங்களுக்கு முன்பு நிலக்கரி ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு தஞ்சாவூரில் பா.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலைக்கு சில விவசாய அமைப்பினர் நன்றி பாராட்டு விழா கூட்டம் நடத்தினர். இந்த நிலையில் தான் முதலமைச்சருக்கு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக பாராளுமன்ற வடிவில் மேடை அமைத்து அதில் நாற்பதுக்கு நாற்பது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

டெல்டாவில் மீத்தேன் திட்டம் உள்ளிட்டவை வருவதற்கு டி.ஆர்.பாலு தான் காரணம் என பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் சூழலில், இக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு கலந்து கொண்டது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேடையில் அண்ணாமலையை விமர்சனம் செய்த பலரும் அ.தி.மு.க குறித்து ஒரு வாத்தை கூட பேசவில்லை.

பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்ட மேடை

பின்னர் டி.ஆர்.பாலு பேசியதாவது, “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடைபெறும் இந்த நன்றி அறிவிப்பு கூட்டம் தேவையான ஒன்றுதான். ஆனால் இதை அவர் விரும்ப மாட்டார். நான் டெல்டாகாரன் என்று தன்னை மையப்படுத்தி கொண்ட ஒரே வார்த்தையில் அவர் நன்றி அறிவிப்புக்கு தகுதியானவர்.

காவிரி பகுதிக்கு பல சோதனைகளை வந்துள்ளது. இப்போது நிலக்கரி சோதனை வந்திருக்கிறது. இது வரவே கூடாது. கரிகால சோழனால் கட்டப்பட்ட உலகிலேயே மிகசிறந்த அணையாக திகழும் கல்லணை இல்லாமல் போயிருந்தால் விவசாயம் பொய்த்து போயிருக்கும், வேளாண் திட்டங்கள் இருந்திருக்காது. எப்படி கல்லணையில் மதகுகள் அமைத்து ஆர்தர் காட்டன் கல்லணையை காப்பாற்றினாரோ, அதே போல் தான் அரசியல் சூறாவளியிலிருந்து, சூழ்ச்சியிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் காப்பாற்றியிருக்கிறார்.

டி.ஆர்.பாலு

ஒன்றிய அரசு நிலக்கரி எடுப்பதற்கு இந்தியா முழுவதும் 101 இடங்களில் டெண்டர் அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தமிழகத்தில் மைக்கேல்பட்டி, வடசேரி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளும் அதில் இருந்தது. வேளாண் மண்டலமான இப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கூடாது, வேறு எந்த திட்டங்களும் கொண்டு வரக்கூடாது என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்கம் அமைத்தால் 50,000 ஏக்கர் விவசாய நிலம் பாழாகும் என்பதை உணர்ந்த முதலமைச்சர் அதை தடுத்திருக்கிறார். நிலக்கரி எடுப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது முதலமைச்சர் சொல்லி தான் எனக்கு தெரியும். உடனே சம்மந்தப்பட்ட ஒன்றிய அமைச்சரை தொடர்பு கொண்டு பாதுகாப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளதே என கேட்டேன். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருக்கிறார் என்றேன்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடந்த நன்றி பாராட்டு கூட்டம்

என்னிடம் முன் கூட்டியே சொல்லி உங்கள் அதிகாரிகள் இதை தடுத்து நிறுத்தியிருக்கலாம் என கூறிய ஒன்றிய அமைச்சர் முறைப்படி டெண்டர் வாபஸ் பெறப்பட்டதாக தெரிவித்தார். எதிர்கட்சியாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் நிலக்கரி எடுப்பதற்கான டெண்டரை தடுத்து நிறுத்தியவர் ஸ்டாலின். இப்ப எல்லோரும் மலை மலைனு பேசுறீங்க எதுக்கு அவர் பற்றி பேச வேண்டும்.

பழநிமாணிக்கம் எம்.பி குறித்து, `ஒரு நல்ல ஆளை தேர்ந்தெடுக்க வேண்டும்’ என அண்ணாமலை பேசியிருக்கிறார். தொடர்ந்து எம்.பியாக தேர்ந்தெடுப்படும் அவர் அழகாகத்தான் இருக்கிறார். நாங்க பெத்த குழந்தையை தூக்கி வைத்து கொண்டு கொஞ்சி, ஆடு, பாடு ஆனால் நீதான் பெத்தேன் என்று எப்படி சொல்ல முடியும், யாரோ வாங்கி கொடுத்த ரபேல் வாட்சை கட்டிக்கொண்டிருக்கிறாய்.

டி,ஆர்.பாலு

என் மானத்துக்கு சவாலாக யாராவது பேசி என் காலைத் தொட்டால் அவர் தலையை மிதிக்காமல் விடமாட்டேன் இது என் கேரக்டர். நாங்கள் ஜாயின்ட் பார்லிமெண்ட் கமிட்டி கேட்டு வருவதால் நாடாளுமன்றத்தில் எங்களை பேச அனுமதிக்க கூடாது என மோடி அறிவுறுத்தியிருக்கிறார். அதனால் எங்களை பேச விடுவதில்லை. ஒரு நபர் மொரிசீயஸிலிருந்து 20,000 கோடி டாலர் எடுத்து வந்துள்ளார். அதை ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ எதுவும் கேட்கவில்லை. இதை ஒழுங்குப்படுத்துகின்ற அதிகாரிகள், ஒன்றிய நிதியமைச்சர் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை.

பிரதமர் மோடி சபைக்கு வருவதே இல்லை. 13 கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் பேசியிருக்கிறோம். பா.ஜ.க தலைமை நிர்வாகத்திலிருந்து கட்சியை விட்டு சென்ற ஒருவர் அண்ணாமலையை 420 மலை, மோசடி மலை என்கிறார். வழக்கிலிருந்து ஒருவரை விடுதலை செய்வதற்காக ரபேல் வாட்ச் வாங்கியதாக மற்றொருவர் சொல்கிறார். இதெல்லாம் ரெக்கார்டில் உள்ளது. அண்ணாமலையை பற்றிய நிறைய பேசலாம். என் தகுதிக்கு அவரை பற்றி பேசக் கூடாது. தி.மு.கவில் புதிதாக சேரும் உறுப்பினர்கள் கூட அண்ணாமலையை பற்றி பேசக் கூடாது.

பழநிமாணிக்கம், டி.ஆர்.பாலு

அரசியல் அறிவில்லாத, அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நாம் பேசுவது சரியில்லை. நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர் பேசியிருக்கிறார். மான, ரோஷம் இருந்தால், உண்மையான ஐ.பி.எஸ்ஸாக இருந்திருந்தால் அண்ணாமலை நேராக நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். அண்ணாமலை சொன்னதுமே நான் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டேன்.

இது வரை அவர் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. என் மீது கிரிமினல் வழக்கு தொடராத காரணத்தால் வரும் எட்டாம் தேதி சைத்தாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடரப்போகிறேன். அதன் பிறகு ரூ.100 கோடி கேட்டு மான, நஷ்ட சிவில் வழக்கு தொடரப்போகிறேன். அண்ணாமலை பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள்.

தஞ்சாவூரில் திமுகவினர் நடத்திய கூட்டம்

அரசியலில் நாகரீகம் என்பது முன்பு இருந்தது. இப்போது நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் உள்ளனர். பாஜகவில் சேருபவர்கள் எல்லாம் போலீஸாரால் தேடப்படுவர்கள் தான். போலீஸூக்கு பயந்தவர்களை, தப்பு செய்கின்ற தனக்கு வேண்டிய நபர்களை 420 பேர்வழி, கட்சியில் சேர்க்கிறார். எதற்காக தவறான நபர்களை சேர்கிறார் என்பதை தி.மு.கவினர் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க ஏதோ ஒரு சதி நடக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு தொண்டனும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் எல்லாம் ஒன்றிணைக்கப்பட்ட சக்தி. திமுகவால் உருவாக்கப்பட்ட எஃகு கோட்டை. கோட்டையை பார்த்து விமர்சனம் செய்தால் நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். ஆனால் கோட்டையில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தால், எங்களை தொட்டுப்பார்க்க நினைத்தால் என்ன நடக்கும் எனத் தெரியாது.

டி,ஆர்.பாலு

திமுகவை அசைத்து பார்க்கவோ, தொட்டுப்பார்க்கவோ எந்த கொம்பனாலும் முடியாது. நாங்கள் எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்தவர்கள். தி.மு.க பார்ப்பதற்கு அழகாக இருக்கும் பளிங்கு மாளிகை மட்டுமல்ல உறுதியான மாளிகையும் கூட. அந்த உறுதியை சீர் குலைக்க முடியாது. ரெளடிகளை வைத்து கொண்டு தேர்தலில் தொட்டுப்பார்க்கலாம் என நினைக்கிறார். உங்களை எப்படி சந்திப்பது என்று திட்டம் போட்டு விட்டோம். நீங்கள் செய்கின்ற தகிடுதத்தம் தமிழ்நாட்டில் எடுபடாது. உங்களை நீங்கள் காப்பாற்றி கொள்ளுங்கள் இல்லையென்றால் கையும் களவுமாக மாட்டுவீர்கள், மோடி முகத்தில் கரியை பூசி கொண்டு போவார். இதை நான் எச்சரிக்கையாவே சொல்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.