அலங்கார மீன் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிகளில் அலங்கார மீன் தொழில்துறை மற்றும் நீர்த் தாவர தொழில்துறை முதன்மையானதாக கருதப்படுவதோடு இந்தத் தொழில்துறையில் ஈடுபாடு காட்டுகின்ற பண்ணையாளர்களை அதிகரிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை தற்போது திட்டங்களை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாதுக்க, ஹோமாகம பிரதேசங்களுக்கு கடந்த 30 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு இடங்களை பார்வையிட்ட பின்னர் பாதுக்க பிரதேச சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதைய அரசின் பிரதமரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இப் பகுதி மக்களிடம் இருக்கின்ற சிக்கல்களை அவர் நன்றாக புரிந்து வைத்திருப்பதாகவும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய இந்த பண்ணைகளை பரீட்சிப்பதற்குத் தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் நாட்டுக்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியை எடுத்து வருவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அமைச்சு மற்றும் நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகரசபை எப்போதும் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

மீன் உணவுகள் மற்றும் குளங்களுக்கு பயன்படுத்துகின்ற உபகரணங்களின் விலையை குறைப்பதற்கு பிரதமருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுக்க பிரதேசத்தில் தனியார் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் நீர்வாழ் தாவர வளர்ப்பு போன்ற தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களுக்கான தேவைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் ஊடாக எதிர்பார்க்கப்படும் தீர்வுகள் ஆராயப்பட்டன.

இங்கு தற்போது வழங்கப்படுகின்ற மீன் உணவுகளின் விலை அதிகமாக இருப்பதும் குளங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற உபகரணங்களின் விலை அதிகரிப்பதன் அடிப்படையிலும் இத் தொழிலை தொடர்வதில் அதிகம் சிரமம் இருப்பதாக அலங்கார மீன்கள் மற்றும் நீர் தாவர தொழில்துறையாளர்கள், அமைச்சருக்கு சுட்டிக்காட்டினார்கள். அதனால் அதற்காக அரசு தலையிட்டு ஏதேனும் நிவாரணம் ஒன்றை வழங்குவதாயின் நாட்டுக்கு எடுத்துவரப்படுகின்ற அந்நியச் செலாவணியை மேலும் அதிகரிக்க முடியும் என்பதோடு இந்தப் பகுதியில் உள்ள அதிகமானவர்களின் தொழில் பிரச்சினைக்கும் சாதகமான தீர்வொன்றை பெற்றுத்தர முடியும் என்றும் கூறப்பட்டது.

தற்போது தனியார் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு அமைச்சு உதவுவது மட்டுமல்லாமல் புதிய முயற்சியாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.