ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் தங்கத்தின் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 2500 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இது தொடர்பாக ஆருத்ரா நிறுவனத்தின் 13 முக்கிய நிர்வாகிகளை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழிக்கு தொடர்புள்ள சிலரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் அவர் சில கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இந்த தகவல் ஆருத்ரா நிறுவனத்தில் பணியாற்றிய ரூசோ என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆர்.கே சுரேஷ் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராகம்படி சம்மன் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து ஆர்.கே சுரேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவதில் இருந்து விலக்கு வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆர்.கே சுரேஷ் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
பாஜக நிர்வாகி ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கையும் ஆருத்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரூசோவின் வங்கி கணக்கையும் ஆய்வு செய்தபோது பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை நடைபெற்றதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து ரூசோவிடம் நடத்தி விசாரணையில் ஆர்.கே சுரேஷ் உடன் இணைந்து புதிய படங்களை தயாரிப்பதற்காக இந்த பணம் அனுப்பியது தெரிய வந்தது. ரூஷோ படம் தயாரிப்பதற்காக சொந்த பணத்தை அனுப்பினாரா அல்லது ஆருத்ரா நிறுவனத்தின் பணத்தை அனுப்பினாரா என்பதை உறுதிப்படுத்தவும், இந்த வழக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். ரூசோ அளித்த தகவலின் அடிப்படையில் ஆர்கே சுரேஷ் வங்கி கணக்கு முடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.