இந்நாட்டில் உள்ள பெரும்பான்மையான அப்பாவி மாணவர்களின் உயிரைப் பறிக்காமல் தொழில்சார் போராட்டங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மனித நேயத்துடன் செயற்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உயர்தர வினாத்தாள்கள் பரிசீலிக்கப்படாமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடன் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச ஊழியர்கள் உட்பட இலங்கை மக்கள் இந்த நேரத்தில் பெரும் தியாகங்களைச் செய்திருக்கிறார்கள், பொருளாதாரப் புரிதல் இருந்தால் ஒரு தரப்பினருக்கு மட்டும் இந்த நேரத்தில் நிவாரணம் வழங்க முடியாது என்பதை அனைத்து பல்கலைக்கழக பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். .
இந்த வினாத்தாள் பிரச்சனையால் இலட்சக்கணக்கான அப்பாவி மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு தொழில்சார் போராட்டத்தில் ஈடுபடுவது பொருத்தமற்ற செயலாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டில் இலவசக் கல்வியின் நம்பகத்தன்மை பாரியளவில் சிதைவடைந்துள்ளமையினால் ஆங்கிலம் பேசத் தெரிந்த பலர் தமது பிள்ளைகளுக்கு சாதாரண தரம் வரை மட்டுமே கல்வியை வழங்குவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பின்னர், டிப்ளோமா கற்கை நெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்கான வாய்ப்புகள் பல காணப்படுவதாக வார இறுதி ஆங்கில நாளிதழ்களில் பிரசுரிக்கப்படுகின்றன என்று தெரிவித்த அமைச்சர், இலங்கையிலுள்ள பெரும்பாலான நகர்ப்புறப் பெற்றோர்கள் தமது சொத்துக்களை அடகு வைத்தாவது தமது பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் கல்வி கற்க வாய்ப்புகளை அமைத்துக் கொடுக்கின்றார்கள்.
இந்தப் பிள்ளைகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும், ஏனைய குழந்தைகள் சாதாரண தரம், உயர்தரம் என எழுதினாலும், அவர்களுடைய விடைத்தாள்கள் பரிசீலிக்கப்படாமல், மூன்று நான்கு வருடங்கள் அவர்களின் வாழ்க்கை வீணாகிவிடும். இது நியாயமற்றது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.