மனிதனின் நரம்பியலில் ஏற்படும் மாற்றங்கள், எந்தெந்த விவகாரத்தில் இவை எப்படி செயல்படுகின்றன போன்ற விவரங்களை ஆய்வு செய்து அதை செயற்கையாக எப்படி பயன்படுத்துவது என்று சோதனை செய்து அதில் வெற்றியும் கண்டவர்தான் ஜெஃப்ரி ஹிண்டன். இதானல்தான் அவர் காட்ஃபாதர் என்று அழைக்கப்படுகிறார்.
ஜெஃப்ரி ஹிண்டன் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிப்படையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விமர்சித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பிதாமகனே ஏஐ குறித்து விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பிபிசி செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த ஜெஃப்ரி ஹிண்டன், “செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களுடன் சேர்ந்து அவர்கள் சொல்வதை நிறைவேற்றும் ஒரு கருவியாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. தற்போது வரை இப்படிதான் இருக்கிறது. ஆனால் இது விரைவில் மாறும். மனிதர்களை விட அதிக திறன் மற்றும் அறிவை இது பெரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதேபோல இந்த தொழில் நுட்பம் நாசகர எண்ணம் கொண்டவர்களிடம் சிக்கினால் என்ன ஆகும்?
டிஜிட்டல் அமைப்புகளிடம் உள்ள செயற்கை நுண்ணறிவை நம்மால் பிரதி எடுக்க முடியும். இதுதான் தற்போது பிரச்னை. இயந்திரங்கள் தங்கள் எதிரி யார் என்பதை முடிவெடுக்கும் திறனை பெற்றுவிட்டது எனில் அதனை கட்டுப்படுத்துவது சிரமம். கூகுளை பொறுத்த அளவில் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. இது கூகுளை விமர்சிக்க வேண்டிய நேரம் இல்லை. முதலில் எனக்கு 75 வயதாகிவிட்டது. என்னால் இதற்கு பின்னரும் ஆக்டிவாக வேலை செய்ய முடியாது. இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கான சரியான நேரம் என்று கருதுகிறேன். அதேபோல கூகுள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஷ்யா – உக்ரைன் போரை குறிப்பிட்டு, புதின் கைகளில் இந்த AI தொழில்நுட்பம் கிடைத்துவிட்டால் என்ன நடக்கும்? என்று யோசித்து பார்த்தீர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெஃப்ரி ஹிண்டன் கேள்வி தற்போது ஒன்றே ஒன்றுதான். மனிதர்கள் பகுத்தறிவுடன் செயல்படுகிறார்கள். ஆனால் இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவை கொடுக்க முனையும் நாம் பகுத்தறிவையும் கொடுக்க முயற்சிக்கிறோம். பயங்கரவாதிகள் பகுத்தறிவுடன் செயல்படும் ஆயுதங்களை கைப்பற்றினால் அவர்கள் இந்த பூமியையே அழித்துவிடுவார்கள்.