புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் கீதா, பபிதா போகத்தின் தந்தையும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் போகத் தங்கள் போராட்டத்திற்கு நடிகர் அமீர்கான் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் ஜந்தர் மந்தர் மைதானத்தில் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கீதா, பபிதா போகத்தின் தந்தையும் முன்னாள் மல்யுத்த வீரருமான மகாவீர் போகத் தங்கள் போராட்டத்திற்கு நடிகர் அமீர்கான் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், “திரைப்பிரபலங்கள் யாரிடமும் நான் ஆதரவை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அமீர்கான் ஒரு ட்வீட்டை பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார். மேலும் இந்தப் போராட்டத்திற்கு பபிதா போகத்தும் ஆதரவை நல்குவதாகக் கூறினார். ஆனால் பாஜகவில் இணைந்துவிட்ட பபிதா போகத், மல்யுத்த வீரர்கள் தங்கள் போராட்டத்தை தனித்து முன்னெடுக்க வேண்டும். அதில் அரசியல் கலப்பு இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்.