எல்லோராலும் நேசிக்கப்படும் ரஜினியை இழிவுபடுத்துவதா?: ரோஜாவுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் முன்னாள் முதல்வரும் ஆந்திர சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழா நடந்தது. இதில் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் “சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி. தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்குப் பார்வை காரணமாகவே ஐதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக. நியூயார்க் நகரம் போல் அபிவிருத்தி அடைந்துள்ளது” என்று கூறினார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா கண்டனம் தெரிவித்திருந்தார். “ஒரு நடிகராக ரஜினி மீது மிகுந்த மரியாதை உள்ளது. ஆனால், அவருக்கு ஆந்திரப்பிரதேச அரசியல் குறித்து எதுவும் தெரியவில்லை. ரஜினி, அரசியல் வேண்டாம் என முடிவு செய்த பின்னர் அரசியல் குறித்து அவர் பேசக்கூடாது. கடவுளாகப் பார்த்த என்.டி.ஆர்க்காக நடத்தப்பட்ட விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து தெரிந்தே தவறாக ரஜினிகாந்த் பேசி உள்ளது கஷ்டமாக உள்ளது. என்.டி.ஆரை கொலை செய்ய திட்டம் போட்டவர்களை நல்லவர் என சொன்னது மட்டுமின்றி மேலே இருந்து அவர் ஆசீர்வாதம் செய்வார் என ரஜினி பேசியது மிகவும் தவறானது. என்று ரோஜா கூறியிருந்தார்.
இந்நிலையில் ரோஜாவின் இந்த கருத்துக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “புகழ்பெற்ற நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக இழிவான கருத்துக்களைத் தெரிவித்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன். நேர்மை, ஒழுக்கம், மனிதநேயத்தின் உருவகமாகத் திகழ்பவர் ரஜினிகாந்த். நல்லுள்ளம் படைத்த அவர் நாடு கடந்து உலக அளவில் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார். அவர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வக்கிரமான ஒய்எஸ்ஆர் கும்பலின் இந்த திட்டமிட்ட தாக்குதல், அவர்கள், மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்து வருவதைக் காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்”என பதிவிட்டுள்ளார்.