டோக்கியோ: ஜப்பான் நாட்டில் அமைந்துள்ள இந்த குட்டி நகரம் ஏலியன்களின் ‘ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாகவே பலரும் குறிப்பிடுகின்றனர்.
இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே மனிதர்கள் வாழும் இடமாக இருக்காது என்பதே ஆய்வாளர்களின் நம்பிக்கை. நிச்சயம் ஏதோ ஒரு கிரகத்தில் நம்மைப் போல உயிரினங்கள் இருக்கும் என்பதே அவர்களின் கருத்து.
இதற்காகத் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, இப்படி வெளி கிரகங்களில் இருக்கும் வேற்று கிரக வாசிகளை தொடர்பு கொள்ள சிக்னல்களை அனுப்புவது போன்ற செயல்களிலும் நாசா ஈடுபட்டுள்ளது.
ஏலியன்கள்: கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இதுபோலத் தான் யுஎப்ஓ எனப்படும் ஆளில்லாத விமானங்களும் கண்டறியப்பட்டன. அவை அமெரிக்காவில் பேசுபொருள் ஆகியிருந்தது. நாசா மட்டுமின்றி, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகமும் கூட இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த யுஎப்ஒ-க்கள் என்பது உலகில் அதிகம் பேசுபொருள் ஆகும் மர்மங்களில் ஒன்றாகும். ஆனால் வானத்தில் விசித்திரமான நகரும் பொருட்களைப் பார்ப்பதாகப் பலரும் கூறுவார்கள். அதிலும் அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற யுஎப்ஓக்களை பார்த்தாக அவர்கள் சொன்னாலும் கூட அது எப்படி இருந்தது என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. இதன் காரணமாகவே யுஎப்ஓக்கள் எப்போதும் விவாதத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது.
இது தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் கூட இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இருப்பினும், போதிய ஆதாரம் இல்லை எனப் பலரும் இதை மறுத்துவிடுவார்கள்.
புறந்தள்ள முடியாது: இருப்பினும், சில குறிப்பிட்ட வீடியோக்களை அப்படி நாம் எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது. அப்படித்தான் 2004, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் அமெரிக்கக் கடற்படை போர் விமானங்களில் பதிவான காட்சிகளை அமெரிக்கா ஆய்வு செய்தது. அவை அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகளின் பதிவு என்று அமெரிக்காவே இதை 2020 ஆம் ஆண்டில் வெளியிட்டது.
இதன் பின்னரே யுஎப்ஓக்கள் குறித்த பேச்சு பரவலாக அதிகரித்தது. அமெரிக்கா போலக் குறிப்பிட்ட இடத்தில் என்று மட்டும் இல்லாமல் பல இடங்களிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாவதாகப் பலரும் கருத்துகளைக் கூறி வருகின்றனர். உலகின் பல இடங்களிலும் இதுபோல ஓரிரு இடங்களில் காட்சிகள் பதிவாகி இருக்கும்.
ஜப்பான்: ஆனால், ஜப்பானைச் சேர்ந்த இந்த குட்டி ஊர் மற்ற அனைத்து ஊர்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது. அங்கே கடந்த 12 மாதங்களில் மட்டும் 450 யுஎப்ஒகள் பதிவாகியுள்ளன. இந்த குட்டி இடம் தான் பூமிக்கு வெளியே இருந்து வருவதாகச் சொல்லப்படும் யுஎப்ஓக்களின் மையாக இருக்கிறது.
ஃபுகுஷிமாவில் உள்ள இந்த ஊரில் மொத்தமே வெறும் 5,000 பேர் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால், அங்கே பல நூறு யுஎப்ஓக்களின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.. இதனால் அந்த ஊர் மக்கள் நகரையே ஏலியன்களின் தீம்களில் மாற்ற முடிவு செய்தனர். அதன்படி, நகர் முழுக்க ஏலியன்கள், யுஎப்ஓக்களின் பாகங்கள் போன்ற சிலைகளை அமைத்துள்ளனர்.
இதை ஜப்பான் நாட்டின் முதல் யுஎப்ஒ ஆய்வகம் என்றும் அங்குள்ளவர்கள் குறிப்பிடுகின்றனர். 2020 இல் லினோ-மச்சி என்ற இடத்தில் அவர்கள் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளனர். இந்த லினோ-மச்சி நகரில் தான் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு யுஎப்ஓக்கள் பதிவாகிறது.
பலரும் இந்த நகரைப் பூமியில் இருக்கும் ஏலியன்களின் ‘ஹாட்ஸ்பாட்’ என்றும் குறிப்பிடுகின்றனர். இதற்காகவே கூட அந்நாட்டு மக்கள் இந்த நகரத்திற்கு விசிட் அடிக்கிறார்களாம்.
இதற்காக இந்த நகரில் யுஎப்ஓக்கள், ஏலியன்களின் நினைவுச் சின்னங்கள்.. அவ்வளவு ஏன் கோபுரம் கூட இருக்கிறதாம். ஒரு புறம் ஏலியன் ஆய்வுகள் என்றால் மறுபுறம் இதைச் சுற்றுலா மையமாகவும் மாற்றுகிறது ஜப்பான்.