கர்நாடகா ரிசல்ட்… அடுத்த நிமிடமே பாஜகவின் வியூகம்… எதிர்பாராத நேரத்தில் மக்களவை தேர்தல்!

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் கர்நாடக சட்டமன்ற தேர்தல். வரும் 10ஆம் தேதி வாக்குப்பதிவும், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்படுகிறது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி கொண்டிருக்கிறது. ஆனால் களம்
காங்கிரஸ்
கட்சிக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே கடைசி நேர வியூகங்களுக்கு பாஜக தயாராகி வருகிறது.

டெல்லி வியூகம்

இதன் முடிவுகள் எப்படி இருந்தாலும் மக்களவை தேர்தலை சீக்கிரமே நடத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் பிரதமர் மோடி பிரதமர் வேட்பாளராக சந்திக்கும் கடைசி தேர்தல். மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து தங்களது சித்தாந்த ரீதியிலான திட்டங்களை செயல்படுத்த முடிந்தவரை போராடும். நடப்பாண்டு மேலும் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல்

இதில் சாதகமான முடிவுகள் கிடைத்தால் 2024 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு சிக்கல் வராது என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது. ஒருவேளை அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்தால் தேர்தலில் சறுக்கலை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு நிலைமையை கொண்டு செல்ல பாஜக விட்டு விடாது. அதற்கு முன்னதாகவே அரசியல் களத்தை கணித்து கச்சிதமாக காய்களை நகர்த்தும்.

வாஜ்பாய் எடுத்த முடிவு

இதையொட்டியே மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு உதாரணமாக 2004ஆம் ஆண்டு சம்பவத்தை கூறலாம். நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. இதனால் தங்களுக்கு சாதகமாக முடிவுகள் வரும் என எதிர்பார்த்து மக்களவை தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டனர். அக்டோபரில் தேர்தல் நடத்த வேண்டி இருந்த சூழலில் 6 மாதங்கள் முன்பாக மே 2004ல் மக்களவையை கலைக்க அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பரிந்துரை செய்தார்.

முன்கூட்டியே தேர்தல்

ஆனால் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறியது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியல் சூழல் பெரிதும் மாறியுள்ளது. 18வது மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16, 2024ல் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் தேர்தல் களத்தை தனக்கு சாதகமாக மாற்ற 6 மாதங்கள் முன்கூட்டியே மக்களவை தேர்தலை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தயாராக இருக்கும் பாஜக

பாஜகவை பொறுத்தவரை மற்ற கட்சிகளுக்கும், இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவெனில் அதன் தயார் நிலை தான். தேர்தலுக்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஒரு தேர்தல் சமீபத்தில் தான் நடந்து முடிந்தது என்றால் உடனடியாக அடுத்து தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு கட்சியினரை பாஜக தயார்படுத்தி வைத்திருக்கும்.

எதிர்க்கட்சிகளுக்கு செக்

இந்த விஷயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் மெத்தனமான போக்கை பின்பற்றி வருவதை பார்க்கலாம். முன்கூட்டியே தேர்தல் நடத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய விடாமல் தடுக்கலாம். மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஏற்படும் பின்னடைவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறது. பாஜகவின் கணக்கு எந்த அளவிற்கு எடுபடப் போகிறது? மக்களவை தேர்தல் முன்கூட்டியே வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.