மாஸ்கோ, மே 4-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்காக கிரெம்லின் மாளிகை மீது உக்ரைன் ஏவிய இரண்டு, ‘ட்ரோன்’கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இந்த போர் துவங்கியதில் இருந்தே, ரஷ்யாவின் பல்வேறு கட்டடங்கள் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல சதித்திட்டம் தீட்டி, கிரெம்லின் மாளிகை மீது இரண்டு ஆளில்லா சிறிய ரக விமானங்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்த முயற்சித்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது.
இது தொடர்பான ‘வீடியோ’வை ரஷ்யா வெளியிட்டுள்ளது. அதில், கிரெம்லின் மாளிகை கோபுரத்தின் அருகே பறக்கும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தாக்குதல் நடந்தபோது, அதிபர் புடின் கிரெம்லின் மாளிகையில் இல்லை என்றும், மாளிகையின் கோபுரத்துக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு பின், அனுமதியின்றி மாஸ்கோவில் ட்ரோன் பறக்கவிட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகரிக்கக் கூடும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் தெற்கே உள்ள கிராஸ்னோடார் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது, உக்ரைன் ராணுவத்தின் ஆளில்லா சிறிய ரக விமானம் நேற்று நடத்திய தாக்குதலில் அந்த கிடங்கு தீக்கிரையானது. ரஷ்ய தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement