குளிக்கரை ரயில்வே இருப்புப் பாதை பணியால் தஞ்சாவூரில் ரயில் நிறுத்தம்: பயணிகள் அவதி

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம், குளிக்கரை ரயில்வே இருப்புப் பாதையில் பணிகள் நடைபெறுவதால் தஞ்சாவூரில் ரயில் நிறுத்தப்பட்டது. அதிகாரிகளின் கவனக்குறைவால் பயணிகளுக்கு மீதி பணம் திருப்பி வழங்கப்பட்டது. பின்னர், அவர்கள் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.

தஞ்சாவூர் – திருவாரூர் வழித்தடத்தில் குளிக்கரை என்ற இடத்தில் ரயில் இருப்புப் பாதையில் பணிகள் நடைபெறுவதால் பிரதான ரயில்களை தவிர்த்து மற்ற ரயில்கள் காலை முதல் ரத்து செய்யப்பட்டன. இந்த வழித்தடத்தில் திருச்சியிலிருந்து காரைக்காலுக்குச் செல்லும் டெமு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் காலை 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு மதியம் 12.05 மணிக்கு வந்து காரைக்கால் புறப்பட்டு செல்லும்.

ஆனால், இந்த ரயிலில் செல்வதற்காகத் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படவில்லை. ரயில் தண்டவாள பணி காரணமாக, அந்த ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது என கூறியதால், அவர்கள் திரும்பிச் சென்றனர்.

அதேவேளை திருச்சியிலிருந்து டெமு ரயிலில் பயணம் செய்த திருவாரூர், நாகப்பட்டிணம், காரைக்கால் வரை செல்லும் பயணிகளுக்கு தஞ்சாவூர் வந்தவுடன் ரயில் நிறுத்தப்பட்ட தகவல் தெரிய வந்தது. பின்னர், பயணிகள், ரயில் நிலைய மேலாளரிடம் முறையிட்டனர்.

திருச்சியில் உள்ள டிக்கெட் வழங்கும் மையத்தில் ரயில் பணி நடைபெறுவது தெரிவிக்காததால் அவர்கள் டிக்கெட் வழங்கி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதில் கவனக்குறைவு ஏற்பட்டுள்ளது எனக் கூறிய ரயில்வே அதிகாரி, இந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு மீதமுள்ள பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் ரயில் டிக்கெட்டை காண்பித்து, மீதமுள்ள பணத்தைப் பெற்றுக் கொண்டு, பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.