உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு விழா நாட்களிலும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் கற்பகவிருட்சம், பூதம், வெள்ளி சிம்மாசனம், தங்க சப்பரம், ரிஷபம், மரவர்ண சப்பரம், இந்திர விமானம் உள்ளிட்ட வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதையடு்த்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை 5 மணி முதல் 5:45 மணிக்குள் மேஷ லக்னத்தில் அம்மனும் சுவாமியும் தேரில் எழுந்தருளினார். இதைதொடர்ந்து பூஜைகள் முடித்து 6:30 மணியளவில் தேர் புறப்பட்டது. இதில் பெரிய தேரில் சுந்தரேசுவரர் – பிரியாவிடையும், சிறிய தேரில் மீனாட்சியும் வலம் வருகிறார்.
இதில் கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி என நான்கு மாசி வீதிகளில் தேர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். மேலும் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.