நியூயார்க்: சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீனாவுக்கான அமெரிக்க தூதர் நிகோலஸ் பர்ன்ஸ் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “ சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராகவே இருக்கிறது. நாங்கள் பேசுவதற்கு ஒருபோதும் வெட்கப்படவில்லை, சீனர்கள் எங்களை சந்திப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தைக்கு நல்ல தளம் தேவைப்படுகிறது. இதே எதிர்பார்ப்பு சீனாவிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று பேசினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே சீனா – அமெரிக்கா இடையே மோதல் வலுத்து வருகிறது. தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் அதிபர் சாய் இங் வென் அமெரிக்காவுக்கு பயணித்ததும், அந்தப் பயணத்தின்போது அந்நாட்டு சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கும் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்மாத தொடக்கத்தில் சீன ராணுவம், தைவானைச் சுற்றி மூன்று நாட்கள் பயிற்சிகளை அறிவித்தது. இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடித்தது. மேலும், இந்த விவகாரத்தில் சீனாவின் அணுகுமுறையை அமெரிக்கா, தைவான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக விமர்சித்தன நினைவுக்கூரத்தக்கது.
இந்த நிலையில் சீனா – அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.
பின்னணி: சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது. அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள் அவ்வப்போது சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.