பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணும் வகையில், `மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா அறிவித்தார்.
இத்திட்டத்தை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.
சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பை அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுகொண்டுள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற உள்ளார். முதற்கட்டமாக வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.