சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்து பயணி உயிரிழப்பு.!
வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் அலிம் உட்டின். இவர் மகன் முகமது மகியுதீன். இந்த நிலையில், அலிம் உட்டினுக்கு புற்று நோய் இருப்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே உட்டின் கொல்கத்தா வழியாக வங்காளதேசம் செல்வதற்கு தன மகனுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு இருவரும் பாதுகாப்பு சோதனை முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது அலிம் உட்டின் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்து பதறிப் போன உட்டின் மகன் விமான நிலைய ஊழியர்கள் உதவியுடன் தந்தையை விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அலிம் உட்டினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து அலிம் உட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமான நிலையத்தில் பயணி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.