கலிபோர்னியா: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஓப்பன் ஏஐ நிறுவனம் ‘சாட்ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப மென்பொருளை அறிமுகம் செய்தது. கேள்விகளுக்கு உடனே பதிலளித்தல், ஏதேனும் ஒரு தலைப்பை உள்ளீடு செய்தால் அது தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தருதல் என மொழி சார்ந்த செயல்பாடுகளை மிக அதிவேகமாக சாட்ஜிபிடி செய்து வருகிறது.
பல்வேறு துறைகளில் ஏஐ மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம், இதை முறையாக கையாளாவிட்டால் மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
யோசுவா பெங்கியோ, யான் லெகன், ஜெஃப்ரி ஹிண்டன் ஆகிய மூவர் ஏஐ உருவாக்கத்தில் முன்னோடிகள் ஆவர். இதில், ஜெஃப்ரி ஹிண்டன், கூகுள் நிறுவனத்தில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர். சமீபத்தில் கூகுள் நிறுவனத்திலிருந்து விலகியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததால், ஏஐயின் ஆபத்து குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க முடியாமல் இருந்ததாகவும், இனிமேல் தன்னால், ஏஐ குறித்து சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஏஐ தொடர்பாக இதுவரையில் நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் குறித்து வருத்தம் அடைகிறேன். எனினும், நான் அந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாவிட்டால், இன்னொருவர் அவற்றை மேற்கொண்டிருப்பார் என்று நினைத்து சமாதானம் கொள்கிறேன். ஏஐ முறையாக கையாளப்படாவிட்டால் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும். தற்போது ஏஐ தொழில்நுட்பம் சார்ந்து நிறுவனங்களிடையே பெரும் போட்டிச் சூழல் உருவாகி இருக்கிறது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஏஐ மூலம் நிறைய போலிச் செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுகின்றன. உண்மை எது, ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட செய்தி எது என்பதை கண்டறிய முடியாத நிலையில் மக்கள் உள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி கவலையளிக்கக் கூடியதாக உள்ளது” என்று ஜெஃப்ரி ஹிண்டன் தெரிவித்துள்ளார்.