அமெரிக்க பார்லிமென்ட் கடன் உச்சவரம்பை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தம் செய்யவோ அனுமதிக்கவில்லை எனில், வரும் ஜூன் 1க்குள், நாட்டின் செலவுகளுக்கே பணம் இருக்காது, வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என்று, அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் யெல்லன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க நிதித் துறை எதிர்கொண்டிருக்கும் இந்த அபாயத்தைச் சுட்டிக்காட்டி, கடந்த திங்களன்று, அமெரிக்க பார்லி., உறுப்பினர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
சிக்கல்
அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: அமெரிக்காவின் கடன்கள் முறையாக அடைக்கப்படும் என்ற முழு நம்பிக்கை ஏற்படுவதற்கு உதவுங்கள். கடைசி நிமிடம் வரை காத்திருந்து, அதன் பின் கடன் உச்சவரம்பு உயர்த்தப்படுவது தொடர்கிறது. இதனால், நமது நாட்டின் வணிகமும், வாடிக்கையாளர் நம்பிக்கையும் பெருமளவு பாதிக்கப்படுகின்றன. குறுகிய கால கடன்களுக்கான வட்டி உயர்வதுடன், அமெரிக்காவின் நம்பகத் தன்மையே கேள்விக்குறியாகிவிடுகிறது. கடன் உச்ச வரம்பை அமெரிக்க பார்லி., உறுப்பினர்கள் உரிய காலத்துக்குள் உயர்த்தவில்லை எனில், அது அமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் வாயிலாக உலக அளவில் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுவிடும். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிதித் துறை, 31.4 டிரில்லியன்அமெரிக்க டாலர் அளவுக்குக் கடன் வாங்கலாம் என்று ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த உச்ச வரம்பு, கடந்த ஜனவரி 19ம் தேதியே எட்டப்பட்டுவிட்டது. இருப்பினும், ஜூன் வரை, கையிருப்புத் தொகை நீடிக்கும் என்று ஜேனட் யெல்லன் நம்பினார். ஆனால், தற்போது நிலை வெகுவேகமாக மாறியுள்ளது. ஜூன் 1க்கு முன்னரே, அமெரிக்க நிதித் துறை கையிருப்புத் தொகை கரைந்துவிடலாம் என்ற அச்சத்தை அவர் எழுப்பியுள்ளார்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, அந்நாட்டின் காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகமும் விவரம் தெரிவித்துள்ளது. எதிர்பார்த்ததைவிடக் குறைவான வரி வசூலும், வரி ‘ரீபண்டு’கள் மிக வேகமாக செய்யப்பட்டதாலும், கையிருப்புத் தொகை குறைந்துவிட்டது என அது கூறியுள்ளது.
எதிர்பார்க்கவில்லை
அமெரிக்கா நிதிப் பற்றாக்குறையில் தான் இயங்கி வருகிறது. அதாவது, அது சம்பாதிப்பதை விட, அதிக அளவில் செலவழித்து வருகிறது. அதன் செலவுகளை ஈடுகட்ட, அந்நாடு ஏராளமாக கடன் வாங்க வேண்டியிருக்கிறது. இந்த கடன்களுக்காக விதிக்கப்பட்ட உச்ச வரம்பு தொகை தான் தற்போது முழுமையாக கரையப் போகிறது. இத்தகைய சூழல் இவ்வளவு விரைவாக வரும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் எதிர்பார்க்கவில்லை.
அதனால், இப்போது அவசர அவசரமாக சூழ்நிலையைச் சமாளிக்க களம் இறங்கியுள்ளார். வரும் மே 9ம் தேதி, அமெரிக்க அதிபர், பார்லிமென்டில் உள்ள இதர தலைவர்களைச் சந்தித்து இந்தப் பிரச்னைக்கு முடிவு காணத் திட்டமிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்