டாஸ்மார்க் கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தமிழக அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்ததாவது, “திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இதுவரை 96 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் தமிழக அரசு இயங்கி வருவதாக சிலர் சொல்லுவது வேதனை அளிக்கிறது.
தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்குவது 24 மணி நேரமும் செயல்படுவதில்லை. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இந்த இயந்திரங்கள் செயல்படுகின்றன.
மேலும் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இப்படி இருக்க உண்மைக்கு மாறான, தவறான தகவல்களை செய்திகளாக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அரசை நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து ஐந்து அரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.