ஊழல் செய்த எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்
அரசு மீது டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்த எடப்பாடி பழனிசாமி..
கடந்த அதிமுக ஆட்சியில் அதிகளவில் ஊழல் நடந்துள்ளதாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை வெளியியானது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘2016 முதல் 2021 வரை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், தமிழ்நாட்டில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கபட்டது. ஆனால் 2.8 லட்சம் வீடுகள் தான் கட்டிமுடிக்கப்பட்டு, தகுதியற்ற பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது.
அதேபோல் 2017-18 கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 ஆயிரம் லேப்டாப்கள் வாங்கப்பட்டு, 8,079 லேப்டாப்கள் மட்டுமே மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. மீதமுள்ள லேப்டாப்கள் 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கொடுக்கப்படாததால், லேப்டாப்களின் உதிரிபாகங்கள் காலாவதியாகி அரசுக்கு 68.71 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு தேவைக்கு அதிகமாக 4.88 லட்சம் புத்தகப்பைகள் வாங்கியதால் 7.28 கோடி ரூபாய் வீணானது, மேலும் காலணி வழங்கும் திட்டத்தில் ரூ.5.4 கோடி வீணாக்கப்பட்டது.
அதேபோல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வசம் இருந்த நெடுஞ்சாலைத்துறையில், 2019 முதல் 2021ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் கணினிகளை பயன்படுத்தி டெண்டர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரே கணினியை பயன்படுத்தி 2091 டெண்டர்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது சிஏஜி அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. எடப்பாடியின் நெருங்கிய உறவினர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘ பழனிசாமி ஆட்சியில் கோவையில் போடாத 16 ரோடுகளுக்கு ரூ.1.98 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வரும் செய்திகளை விசாரித்து, ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் மீது முதலமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் பல ஆண்டுகளாக பழுதாக இருந்த சாலைகளை புதுப்பிக்க நிதி ஒதுக்கிய பின் அந்த நிதியைக்கொண்டு வேறு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்த முறைகேடு அம்பலத்துக்கு வந்திருக்கிறது. அதனை மாவட்ட ஆட்சியரும் உறுதி செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
உப்புத்தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று எதுகை மோனையில் வீடியோ வெளியிடும் முதல்வர், தனது ஆட்சியின் கீழ் பணி செய்யும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த முறைகேட்டை மூடி மறைத்து ஊழலுக்குத் துணை போயுள்ளனர் என்பதை அறிவாரா? கடந்த ஆட்சியில் ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த விடியா அரசு, கடந்த கால ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு மற்றொரு முறைகேடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா? என்ற மக்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.