ஹைதராபாத்: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா என 4 மாநிலங்களில் சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமத்தின் பட்டு ஜவுளி கடைகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
வருமான வரி செலுத்துவதில் முறைகேடுகள் நடப்பதாக சந்தேகம் எழுந்ததால், நேற்று ஒரே நாளில், சாய் சில்க்ஸ் கலா மந்திர் குழுமத்தின் பட்டுப் புடவை கடைகளான கலாமந்திர், மந்திர், காஞ்சிபுரம் வர மஹாலட்சுமி ஆகிய கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, காஞ்சிபுரம், ஹைதராபாத், விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள காஞ்சிபுரம் வர மஹாலட்சுமி, மாதப்பூரிலும் இதே நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் சில ஜவுளி கடைகள், கச்சிபவுலி, கூகட்பல்லி போன்ற இடங்களில் உள்ள காஞ்சி பட்டு துணிக்கடைகளிலும் வருமான வரித் துறையினர் நேற்று காலை 7 மணி முதல் தொடர்ந்து இரவு வரை சோதனை நடத்தினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் கணக்கில் வராத பல பட்டு புடவைகளை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல முக்கியஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேபோல, விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினத்திலும் இதே நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை காரணமாக, வாடிக்கையாளர்கள் கடைக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் விற்பனை நிறுத்தப்பட்டது.
பட்டுச் சேலைக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் நூற்றுக்கணக்கான பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர் வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல பட்டுச் சேலை உற்பத்தி நிறுவனமான வர மஹாலட்சுமி சில்க்ஸ் நிறுவனத்தில் நேற்று காலை 9 மணி அளவில் சென்னையில் இருந்து வந்திருந்த வருமான வரித் துறையினர் 10 பேர் சோதனை நடத்தினர்.
இதன் காரணமாக, பட்டுச் சேலை வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல, கடையில் இருந்து ஊழியர்கள் உள்ளிட்டோரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை காரணமாக காஞ்சிபுரம் காந்தி வீதியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இதேபோல, சென்னை பாண்டி பஜாரில் உள்ள கடையிலும் சோதனை நடத்தப்பட்டது.