துடைப்பத்தால் அடித்து கொள்ளும் மாமன், மச்சான்கள் – தேனி அருகே கோயில் திருவிழாவில் வினோத நிகழ்வு!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சித்திரைத் திருவிழாக்கள் வெகுவிமர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அவற்றுள் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து ஊராட்சிக்கு உட்பட்ட மறவபட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலிலும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கியத் திருவிழாவின் ஒரு பகுதியாக மாமன், மச்சான்களைத் துடைப்பத்தால் அடிக்கும் வினோத நிகழ்வு நடைபெற்றது. 

சேற்றில் உருளும் பக்தர்கள்

பொதுவாக தென் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மாசி, பங்குனி மாதங்களில்தான் அதிகமாக ஊர்க் கோயில் திருவிழாக்கள் நடைபெறும். அதில் விழாவின் நிறைவு நாளில் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வது வழக்கம். குறிப்பாக முறைமாமன், முறைபெண்கள் மீது மஞ்சள் ஊற்றும் நிகழ்வு தற்போதும் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் மாமன், மச்சான்கள் ஒருவருக்கொருவர் துடைப்பத்தால் அடிக்கும் வினோத நிகழ்வைக் காண மறவபட்டிக்குச் சென்றோம். ஊரின் மையப்பகுதியில் இருக்கும் முத்தாலம்மன் கோயில் அருகே ஆண்கள் மட்டும் திரண்டிருந்தனர். சுற்றி ஏராளமான பெண்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீர் டேங்க் டிராக்டர் வந்து அப்பகுதி முழுவதும் தண்ணீரைக் கொட்டிவிட்டுச் சென்றது. 

துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் இளைஞர்கள்

கோயிலில் சாமி பாடல்கள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்க கைகளில் பொம்மை அரிவாள்களுடன் கருப்பசாமி, அய்யனார் வேடம் அணிந்த ஆண்கள் அங்கே துள்ளிக்குதித்து ஆடியதில் சிறிது நேரத்தில் அந்தப் பகுதி சேறும் சகதியுமாக மாறியது. ஆண்கள் தாங்கள் வைத்திருந்த துடைப்பத்தைக் கொண்டு சேற்றில் நனைத்து எடுத்து ஒருவருக்கொருவர் மாறி மாறி முதுகில் அடித்துக் கொண்டனர். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாமன், மச்சான் உறவுக்காரர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த நிகழ்வு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ஆண்கள் சேலை, நகை, பூ வைத்து கொண்டு, பள்ளி மாணவிகள் போல பாவாடை சட்டையுடனும் பெண் வேடமிட்டுக் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். 

துடைப்பத்தால் அடி வாங்கிய களைப்பில் ஓரங்கட்டி நின்ற சுரேஷ் என்பவரிடம் பேசினோம். எங்கள் ஊர் 600 வீடுகள் உள்ளன. பலரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் 300 பேர் ராணுவத்திலும், 50-க்கும் மேற்பட்டாோ் போலீஸாகவும், வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அரசுப் பணிகளிலும் உள்ளனர். இவர்கள் அனைவரும் முத்தாலம்மனை வேண்டிக் கொண்டவர்கள்தான். இன்று பெண் வேடமிட்டுக் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த பலரும் ராணுவ வீரர்கள், போலீஸார் தான். 

வேடமிட்டு வந்து ஆண் பக்தர்கள்

எங்கள் முன்னோர்கள் சேற்றுமண் பூசி சாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர். தற்போதும் பல ஊர்களில் உடல் முழுவதும் சேற்றுமண் பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அப்போது எங்கள் பகுதியில் சேற்றுமண் பூசி வருவோர் ஒருவருக்கு ஒருவர் தென்னை மட்டையால் அடித்துக் கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது.

நடமாடும் சிறுமிகள்

அவ்வாறு அடித்துக் கொண்டால் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். மழை பொழியும், விவசாயம் செழிக்கும், நோய் நொடிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. காலப்போக்கில் தென்னை மட்டைக்கு பதிலாக துடைப்பத்தால் சேற்றில் நனைத்துக் கொண்டு அடிக்கும் பழக்கம் வந்துவிட்டது. மாமன், மச்சான் உறவுகளை ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வர். இதில் யாரும் யாரையும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். 

சித்திரை மாதத்தில் சாமி கும்பிடுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் ஊரில் உள்ள அனைவரும் காப்பு கட்டி விரதத்தை மேற்கொள்வோம். வெளிநாடு, வெளியூர்களில் இருக்கும் அனைவரும் ஊருக்கு வந்துவிடுவார்கள். எப்போதும் கோயிலில் உருவமின்றி இருக்கும் முத்தாலம்மன் செவ்வாய் நள்ளிரவு பக்கத்து ஊரில் இருந்து பட்டாசு வெடித்து ஊர்வலமாக அழைத்து வரப்படும்.

பெண் வேடமிட்டிருக்கும் போலீஸ் அன்பழகன்

பட்டு உடை, நகைகள் அணிவித்து வரும் அம்மனுக்குக் காலை மாவிளக்கு எடுக்கப்படும், அதனைத்தொடர்ந்து முளைப்பாரி, பால்குடம் எடுப்பர். இந்த நிகழ்வுகள் முடிந்தபிறகு தான் துடைப்பத்தால் அடிக்கும் நிகழ்வு தொடங்கும். இறுதியாக ஊரின் தெற்கு ஊர்வலமாக அழைத்க்ச் செல்லப்பட்டு அம்மன் சிலை உடைக்கப்படும். இந்த இரண்டு நாள்களுக்கு ஊரே கோலாகலமாக இருக்கும் என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.