சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் மே 8-ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதுதவிர, காற்றின் ஈரப்பத அளவு கூடியிருப்பதால், நிலப்பகுதியில் ஈரப்பத குவியல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 60 இடங்களில் கனமழையும்,13 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் வானமாதேவியில் 19 செ.மீ., சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கத்தில் 17 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 15 செ.மீ., விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி முதல் தேனி வரையிலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் 3-ம் தேதி (இன்று) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடலில் மே 6-ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. தொடர்ந்து, 8-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுமா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.