மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் திடீரென விலகியுள்ளார். தனது முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார், கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். கருத்து வேறுபாடு நீடித்ததால், அதே ஆண்டு ஜூன்10-ம் தேதி காங்கிரஸில் இருந்து வெளியேறி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அது முதல் அக்கட்சித் தலைவராக சரத்பவார் பதவி வகித்து வந்தார்.
கடந்த 2015-ல் சரத் பவாரின் சுயசரிதை நூல் வெளியானது. இதன் 2-ம் பாகம் வெளியிடும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் சரத் பவார் பேசியதாவது:
கடந்த 24 ஆண்டுகளாக கட்சித் தலைவராக பதவி வகிக்கிறேன். கடந்த 63 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். இந்த நீண்ட அரசியல் பயணத்தை எங்காவது ஓர் இடத்தில் நிறுத்திதானே ஆகவேண்டும். ஒருவர் பேராசை கொள்ளக் கூடாது. தேசியவாத காங்கிரஸ் தலைவர்பதவியில் இருந்து விலகுகிறேன். புதிய தலைவரை தேர்ந்தெடுக்க, கட்சியின் மூத்த தலைவர்களை கொண்ட புதிய குழு உருவாக்கப்படும்.
எனது மாநிலங்களவை எம்.பி.பதவிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது. இந்த காலத்தில் மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவேன். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து கவனம் செலுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.
கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக கடிதமும் அளித்துள்ளார்.
சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் சரத் பவார் திடீரென ராஜினாமா முடிவை அறிவித்ததும், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கண்கலங்கினர். ஒவ்வொருவராக மேடைக்கு சென்று, ராஜினாமா முடிவை கைவிடுமாறு சரத் பவாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், அஜித் பவார், சுப்ரியா சுலே உள்ளிட்டோர் நேற்று மாலை சரத் பவாரை தனியாக சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித் பவார்,‘‘ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதற்கு 3 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளார்’’ என்றார்.
இதற்கிடையே, புதிய தலைவரை தேர்வு செய்ய பிரபுல் படேல், சுனில் தாட்கரே, கே.கே.சர்மா, பி.சி.சாக்கோ, அஜித் பவார், ஜெயந்த் பாட்டீல், சுப்ரியா சுலே, சாகன் புஜ்பால், திலீப் பாட்டீல், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோபி, ஜிதேந்திர அத்வாத், ஹாசன் முஷ்ரிப், தனஞ்ஜெய் முண்டே, ஜெய்தேவ் கெய்க்வாட் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆலோசனை நடத்தி, கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் அஜித் பவார், சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் முன்வரிசையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மகளா, அண்ணன் மகனா?
தேசியவாத காங்கிரஸில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கும், சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸுக்கு 53 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில், 40 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார், பாஜகவில் இணைய இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இதன்பிறகு, சரத் பவார் – அஜித் பவார் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இதன்படி, பாஜகவில் இணையும் முடிவை அஜித் பவார் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில்தான் தற்போது சரத் பவார் ராஜினாமா செய்துள்ளார்.
பால் தாக்கரே பாணியா?
கடந்த 1992-ல் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரேவுக்கும், பால் தாக்கரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரேவுக்கும் மோதல் ஏற்பட்டது. கட்சி உடையும் நிலை ஏற்பட்டது. அப்போது பால் தாக்கரே, கட்சி நாளிதழான ‘சாம்னா’வில், ‘நானும், எனது குடும்பமும் சிவசேனாவில் இருந்து விலகுகிறோம். கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று அறிவித்தார்.
இதனால், கட்சியில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. கட்சித் தொண்டர்கள் மும்பையில் குவிந்தனர். அவர்களது வேண்டுகோளை ஏற்று, பால் தாக்கரே மீண்டும் கட்சிப் பதவியை ஏற்றுக் கொண்டார்.
தேசியவாத காங்கிரஸில் தற்போது இதே நிலை ஏற்பட்டுள்ளது. சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவுக்கும், பவாரின் அண்ணன் மகன் அஜித் பவாருக்கும் வாரிசு போட்டி எழுந்துள்ளது. இந்த சூழலில் பால் தாக்கரே பாணியை சரத் பவார் பின்பற்றுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.