நடிகரும், இயக்குனருமான மனோபாலா காலமானார் : திரைக்கலைஞர்கள் அஞ்சலி

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று(மே 3) அவரது உயிர் பிரிந்தது.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் பயணித்த மனோபாலா 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் டிவி சீரியலும் எடுத்துள்ளார். 3 படங்கள் தயாரித்தும் உள்ளார். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்துள்ளார். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ஆகாய கங்கை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி உள்ளார். சிவாஜி, ரஜினி துவங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை பல நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார்.

மனோபாலாவின் மறைவு திரை ரசிகர்கள் இடையே கடும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நாளை(மே 4) இறுதிச்சடங்கு
மறைந்த மனோபாலாவின் உடல், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நாளை(மே 4) காலை 10.30 மணியளவில் வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெறுகிறது.

திரைக்கலைஞர்கள் அஞ்சலி
மறைந்த மனோபாலா உடலுக்கு விஜய், மணிரத்னம், பிசி ஸ்ரீராம், மோகன், தாமு, சந்தானபாரதி, ஸ்டன்ட் சில்வா, சித்தார்த், மோகன்ராம், வித்யூலேகா, நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம், சிவகுமார், சுசீந்திரன், ஏஎல் விஜய், திரு, சினேகன், கார்த்திக் ராஜா, டெல்லி கணேஷ், சங்கர் கணேஷ், கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் முருகதாஸ், முரளி ராமசாமி, தினா, பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, ரமேஷ் கண்ணா, ஆர்வி உதயகுமார், பேரரசு, ஹெச் வினோத், ராதாரவி, ஆர்யா, ஏஎல் அழகப்பன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.