பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மூன்றாவது முறையாக இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், ஒரு சிறுமி உட்பட மல்யுத்த வீராங்கனைகள் பலரிடம் இவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, சக வீராங்கனைகள் குற்றம்சாட்டிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் ஆகியோர் போராட்டம் நடத்தினர். பின்னர் இதில் விளையாட்டுத்துறை அமைச்சகம் தலையிட்டு புகார்கள் குறித்து விசாரணை நடத்த, மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
விசாரணைக் குழுவும் தனது அறிக்கையை துறை அமைச்சகத்திடம் சமர்பித்திருக்கிறது. அதன் பிறகும் பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், கடந்த 23-ம் தேதி முதல், இரவு பகலாக டெல்லி ஜந்தர் மந்தரில் வீராங்கனைகள், வீரர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், போராட்டம் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சம்மேளனத் தலைவர் பி.டி.உஷா,“விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவரும் வரை வீரர்கள் அமைதி காத்திருக்க வேண்டும்.
இது, நாட்டுக்கும், விளையாட்டுக்கும் நல்லதல்ல. இது ஒரு எதிர்மறையான அணுகுமுறை. இந்தப் போராட்டம் ஒழுக்கமின்மைக்குச் சமம்“ என்று விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், “பி.டி.உஷாவின் கருத்து எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அவர் ஒரு பெண்ணாக இருந்தும், எங்களை ஆதரிக்கவில்லை. நாங்கள் என்ன ஒழுங்கீனத்தைச் செய்தோம்… நாங்கள் அமைதியாக இங்கே அமர்ந்திருக்கிறோம். எங்களுக்கு நீதி கிடைத்திருந்தால் இதை நாங்கள் செய்திருக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, இன்று விளையாட்டு வீரர்கள் போராட்டம் நடத்தி வரும், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்ற இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை. பி.டி.உஷா சென்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, “பி.டி.உஷா எங்களைச் சந்தித்து, அவரின் ஆதரவை உறுதிப்படுத்தினார். `நான் முதலில் விளையாட்டு வீராங்கனை, பின்னர்தான் நிர்வாகி’ என்றும் தெரிவித்தார். எங்களுக்கு நீதி கிடைக்க உதவுவதாகவும் உறுதியளித்தார்” எனக் கூறினார்.