ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சிலநாட்களாக கோடை வெயிலுக்கு மத்தியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் நேற்று இரவு முதல் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுள்ளதால், அணையில் இருந்து 99 கன அடி தண்ணீர் நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் ஆற்றைக்கடந்து செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.