பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளம் போன்ற வெறுப்பை விதைக்கும் அமைப்புகளுக்கு தடை விதிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஹொசப்பேட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:
ஹொசப்பேட்டை கூட்டத்துக்கு வருவதற்கு முன்பு இங்குள்ள ஹனுமான் கோயிலுக்கு சென்று அவரது காலடியில் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்தேன். அப்போது, கர்நாடகாவின் கலாச்சாரம், கவுரவம் ஆகியவற்றை அழிக்க முயற்சிப்பவர்களை ஒருபோதும் வெற்றிப்பெற அனுமதி மாட்டேன் என சபதம் எடுத்துக்கொண்டேன்.
ஆனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ஜெய் பஜ்ரங்பலி என கோஷமிடும் பஜ்ரங் தள அமைப்புக்கு தடை போடப்போவதாக தெரிவித்துள்ளது. இதே கட்சி முன்பு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்டவர்களை அழிக்க நினைத்தது. இப்போது பஜ்ரங் தள அமைப்பினரை சிறையில் அடைக்க முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை, கர்நாடகாவை முன்னேற்றும் வகையிலான திட்டங்களை கொண்டிருக்கிறது. நாட்டிலே முதல் மாநிலமாக மாற்றுவதற்கான வரைபடத்தை பாஜக தேர்தல் அறிக்கை கொண்டிருக்கிறது. ஏழை எளியவர்களையும் விவசாயிகளையும் முன்னேற்றுவதை பாஜக கொள்கையாக கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.