பாகிஸ்தானில் பெய்து வரும் கன மழைக்கு ஒன்பது சுற்றுலா பயணியர் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலம் சமவெளி பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டித் தீர்த்தது. அப்போது, அப்பகுதியில் சுற்றுலா பயணியர் சென்ற ஜீப் ஒன்று சறுக்கி அருகில் உள்ள ஆற்றில் மூழ்கியது. இதில் சென்ற ஒன்பது பயணியரும் பலியாகினர். மீட்பு படையினர் தீவிரமாக தேடியும் அவர்களது உடல்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதே போல் கராச்சியில் பெய்த கன மழைக்கு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாகவும், தென் மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் நடந்த மழை தொடர்பான விபத்துகளில் நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பாக்.,கில் கொட்டிய கன மழைக்கு மொத்தம் 14 பேர் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக, பாக்., பிரதமர் ஷபாஷ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த வாரம் முழுதும் தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை துறையினரும் கவனமுடன் செயல்பட்டு அசம்பாவிதம் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார். இங்கு, கடந்த கோடை காலத்தில் பெய்த கன மழையாலும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்திலும் சிக்கி 1,739 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement