சென்னை : பாமக தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸை அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசை விமர்சிக்கும் அன்புமணியை சாடியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை கோயம்பேடு அருகே வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தானியங்கி தொழில்நுட்ப மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மது வழங்குவதை மூடவில்லை என்றால் நாங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “24 மணி நேரமும் திறந்த வெளியில் தானியங்கி இயந்திரம் செயல்படுகிறதா என்பதை தெரிந்து சரியான தகவல்களுடன் செய்திகள் வெளியிட வேண்டும். 21 வயதுக்கு குறைவான யாராவது இதில் மதுபானம் வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். எந்த மாநிலத்திலும் இதுபோன்ற தானியங்கி இயந்திரம் இல்லையா?
அன்புமணி அட்டெண்டன்ஸ் : 29% நாடாளுமன்ற வருகைப் பதிவு கொண்ட, நாடாளுமன்றத்திற்க் போகாதவர்கள் எல்லாம் இது குறித்து அறிக்கை வெளியிடுகிறார்கள். 2019-இல் தான் இந்த மாலில் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. மால்களில் உள்ள தானியங்கி மதுபான விற்பனைக் கடை கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்ற உண்மையை மறைத்து இன்றைக்கு திமுக அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தியா முழுவதும் கேட்க வேண்டியதுதானே? : அன்புமணி ராமதாஸ் உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர கேட்க வேண்டியதுதானே. அதற்கு தைரியமில்லை. இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள். சென்ற அரசாங்கத்தில் தொடங்கப்பட்ட கடைகளை அறிவிக்கப்படாமல் 90 கடைகள் மேல் மூடப்பட்டுள்ளது. சட்டசபையில் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் உண்மைக்கு மாறாக செய்திகள் பரப்பப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி அமைக்க பாமக விரும்புவதாக கூறப்படுகிறது. திமுக அரசின் பல்வேறு திட்டங்களையும், முதல்வர் ஸ்டாலினையும் பாமக தலைவர்கள் அவ்வப்போது பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், மதுபான விற்பனை இயந்திர விவகாரத்தில் அன்புமணி ராமதாஸை அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.