பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மனோபாலா 15 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இயக்குநர் மனோ பாலா
தமிழ் திரைத்துறையின் தவிர்க்க முடியாத இயக்குநரும் நடிகருமான மனோ பாலா பாரதி ராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
இவர் இயக்கிய முதல் படமான ஆகாய கங்கை கடந்த 1982 ஆண்டு வெளியானது. மேலும் இவர் நான் உங்கள் ரசிகன், பிள்ளை நிலா, ஊர்காவலன், சிறைபறவை சிறகுகள் போன்ற 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் 1994ஆம் ஆண்டு வெளியான தாய்மாமன் படத்தில் தொடங்கி பல்வேறு இயக்குநர்கள் இயக்கிய படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குண சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இவரது தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த சதுரங்க வேட்டை படம் பெரும் வெற்றி பெற்றது.
கல்லீரல் நோயிற்கு சிகிச்சை
கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 15 நாட்கள் வீட்டிலிருந்த படியே சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இவரது மரணத்தால் தமிழ் சினிமா வட்டாரம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
மனோ பாலாவின் மறைவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் பிரபல இயக்குநரும், நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபங்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் மனோ பாலா மறைவிற்கு நடிகர்கள் கருணாஸ், மதன்பாபு, இயக்குநர் விக்ரமன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்திலுள்ள மனோபாலாவின் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.