மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் திடீரென டிரோன் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா ஓராண்டிற்கு மேலாகப் போரை நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் ஓராண்டைக் கடந்தும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலகின் பல்வேறு நாடுகளும் முயன்ற போதிலும் எதுவும் பெரியளவில் பயன் தரவில்லை. ரஷ்ய அதிபர் புதின் இந்த போரில் வெல்ல வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளார்.
ரஷ்யா: இந்தச் சூழலில் உக்ரைன் மீது ரஷ்ய சில பரபர புகார்களை முன்வைத்துள்ளது. அதாவது அதிபர் புதினை கொல்ல உக்ரைன் முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக உக்ரைன் இரண்டு ட்ரோன்களை ஏவியதாகவும் அதைக் கடைசி நிமிடத்தில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா கூறியுள்ளது. மேலும், இதற்குப் பதிலடி தரும் வகையில் நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த தாக்குதலில் புதின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அவருக்குக் காயமும் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அதிபர் மாளிகையில் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இருப்பினும், இதில் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றே ரஷ்யா கூறியுள்ளது.
டிரோன்கள்: இதைத் திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று குறிப்பிட்ட ரஷ்யா, தங்கள் நாட்டின் தலைவரைக் கொல்ல எடுக்கப்படும் முயற்சி என்றும் சாடியுள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகை நோக்கி இரண்டு டிரோன்கள் வந்ததாகவும் இருப்பினும் , கடைசி நேரத்தில் அது முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்த போது புதின் அதிபர் மாளிகையில் இல்லை என்று கிரெம்ளின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ரஷ்ய அதிபர் மாளிகையில் உள்ள கோட்டையில் வெள்ளை நிற புகை வருவதும் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல மற்றொரு வீடியோவில் அதிபர் மாளிகைக்கு மேலே வரும் டிரோனை ரஷ்யா சுட்டு வீழ்த்துவதும் பதிவாகியுள்ளது.
தடை: இதற்கிடையே ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இனி அங்கீகரிக்கப்படாத டிரோன்கள பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாஸ்கோ மேயர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “அரசு அதிகாரிகளிடமிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாத விமானங்கள் பறக்கத் தடை வித்துள்ளோம். அங்கீகரிக்கப்படாத ட்ரோன் நடமாட்டத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த டிரோன் தாக்குதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள போதிலும், மே 9ஆம் தேதி நடக்கும் அந்நாட்டு ராணுவத்தின் வெற்றி பேரணி திட்டமிட்டது போல நடக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது. சுமார் 27 மில்லியன் உயிர்களைப் பலி கொடுத்து சோவியத் யூனியன் ஹிட்லரின் நாஜிக்களை விரட்டியடித்த தியாகத்தை மக்களிடையே விளக்கும் நிகழ்வுதான் இந்த வெற்றி பேரணியாகும்.
உக்ரைன்: உக்ரைனிடம் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்த போதிலும், திட்டமிட்டபடி பேரணியை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவே ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. ரஷ்யா இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறும் போதிலும் உக்ரைன் இது குறித்து எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.