கர்நாடக தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் களம் வெவ்வேறு மாதிரியாக காணப்படுகிறது. அந்த வகையில் பெங்களூரு தெற்கு தொகுதியின் கள நிலவரத்தை இங்கே பார்க்கலாம். இந்த தொகுதி கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவிலான வீட்டுவசதி திட்டங்கள், தொழில் நிறுவனங்கள் என மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதி
இந்த தொகுதியில் 6,95,742 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3,66,719 பேர், பெண்கள் 3,28,920 பேர். இங்கு பிரச்சினைக்குரிய விஷயங்களாக பார்க்கப்படுவது ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை, உள்கட்டமைப்பு வசதிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவது, பிரதமர் மோடிக்கான சிறிய அளவிலான ஆதரவு அலை உள்ளிட்டவற்றை சொல்லலாம்.
2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள்
பாஜகவின் கோட்டை
இந்த தொகுதி 2008 முதல் பாஜகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. மூன்று முறையும் எம்.கிருஷ்ணப்பா எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் அவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை வெற்றி அவ்வளவு எளிதாக இருக்காது என்கின்றனர். அதற்கு காரணம் எதிர்க்கட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள். மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் மிகவும் செல்வாக்கு பெற்ற ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹெச்.பி.ராஜகோபால ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜேடிஎஸ் சவால்
கடைசி நிமிட முடிவாக ரெட்டியை தேர்வு செய்துள்ளனர். இவர் மட்டும் இல்லையெனில் பெங்களூரு தெற்கு தொகுதியின் வெற்றி ஒருபக்கமாக மாறியிருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதனை கிருஷ்ணப்பாவே உறுதி செய்திருக்கிறார். இவர் பேசுகையில், இதற்கு முன்பு காங்கிரஸ் தான் போட்டியாக இருந்தது. இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளம் அப்படி ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது.
ரிப்போர்ட் கார்டு
ஆனால் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. 15 ஆண்டுகளாக என்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டிற்கும் ரிப்போர்ட் கார்டு உடன் சென்று வாக்கு சேகரிப்போம். பெங்களூருவிற்கு பாஜக அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்து சொல்வோம் என்று தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், 15 ஆண்டுகளாக பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் ஏமாற்றம் அடைந்துவிட்டனர். லஞ்சம் கொடுக்காமல் இங்கே எந்த காரியமும் நடப்பதில்லை.
காங்கிரஸ் போட்டி
பெங்களூரு மாநகராட்சி உடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு கிராமங்களுக்கு சரியான சாலை வசதிகள் இல்லை என்றார். இவர்களுக்கு பலமான போட்டி அளிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்.கே.ரமேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பேசுகையில், லஞ்சம் தான் இங்கே பிரதானமாக இருக்கிறது. இதற்கு முன்பு நான் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்துள்ளேன். கடந்த முறையை போல் அல்லாமல் எனக்கு வரவேற்பு சிறப்பாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.