சென்னை: அரசு மருத்துவ பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மருத்துவ தர நிர்ணய உறுப்பினர் மருத்துவர் ஜே.எல்.மீனா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவிலுள்ள மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேவைக்கேற்ப பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். எந்தக் கல்லூரிக்கு எந்த எண்ணிக்கையில் பேராசிரியர்கள் தேவை உள்ளது என்பது குறித்த ஆய்வை மருத்துவ நிர்ணய வாரியம் மேற்கொள்வதற்கு முன்பு, பணியிட மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோல், பணியிட மாற்றத்தால் பேராசிரியர்கள் அதற்கு முன்பு பணியாற்றிய கல்லூரிகளில் காலி பணியிடம் உருவாவதாகவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த விவகாரத்தில் சில அறிவுறுத்தல்களை மருத்துவ தர நிர்ணய வாரியம் வழங்குகிறது.
அதன்படி, வரையறுக்கப்பட்ட விதிகளுக்குட்பட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கையில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான பேராசிரியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு கல்வியாண்டில் ஒரு பேராசிரியர் ஏதேனும் ஒரு மருத்துவக் கல்லூரியில்தான் பணியாற்ற வேண்டும். அதே கல்வியாண்டில் இரு வேறு கல்லூரிகளில் அவரதுபணியிட மாற்றம் இருத்தல் கூடாது. ஒருவரை மாற்றம் செய்யும்போது அவர் ஏற்கெனவே பணியாற்றிய கல்லூரியில் காலிபணியிடம் ஏற்படாதவாறு செயல்படுதல் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.