மனோபாலா மறைவு : முதல்வர், ரஜினி, கமல், இளையராஜா உள்ளிட்டோர் இரங்கல்
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக படைப்பாளியான மனோபாலா(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. மனோபாலா மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவு : “திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான திரு. மனோபாலா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திரு. மனோபாலா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்”.
ரஜினி
நடிகர் ரஜினி வெளியிட்ட இரங்கல் பதிவு : பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
கமல்
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரதிராஜா
என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்.
இளையராஜா
நண்பர் மனோபாலா காலமான செய்தி கேட்டு மிகவும் துயரமுற்றேன், மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராகவும், பின்னர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றி பின்னாளில் சொந்தமாக படம் இயக்கினார். என்னை பார்ப்பதற்காக கோடம்பாக்கம் பாலத்தில் செல்லும் போது காரில் பார்க்க காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர். பின்னர் இயக்குனர், நடிகர் ஆன பின்னர் கூட ரெக்கார்டிங் தியேட்டரில் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என இளையராஜா வீடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்
எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
கவுதம் கார்த்திக்
இயக்குனர், நடிகர் மனோபாலா சார் இப்போது நம்மிடையே இல்லை என்று கேட்கும் போது நெஞ்சம் பதறுகிறது. உங்களுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கார்த்தி
இந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அனைவருக்காகவும் எல்லா இடங்களிலும் இருக்கக்கூடிய ஒரு மனிதன். மிஸ் யூ மனோபாலா சார். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.
சாந்தனு
அதிர்ச்சியாக உள்ளது. மனோபாலா சார் நீங்கள் ஒரு இனிமையான மனிதர். அவரது திடீர் மறைவைக் கேட்டு அதிர்ச்சியாகிவிட்டேன். நீங்கள் எப்போதும் எங்களைச் சுற்றி இருப்பீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.
ஆத்மிகா
சொல்ல முடியாத அதிர்ச்சி. எங்கள் காலத்தின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான மனோபாலா சார், உங்களை மிஸ் செய்கிறோம்.
சேரன்
இயக்குனர் சேரன் பதிவிட்டிருப்பது, தாங்க முடியாத செய்தி… மனதை உலுக்கி எடுக்கிறது.. நான் பெற்ற உங்களின் அன்பு மறக்க முடியாதது…. போய்வாருங்கள் மாமா….
வரலட்சுமி
இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.. நல்ல மனிதர்களில் ஒருவர்.. கடந்த நவம்பரில் அவருடன் பணிபுரிந்தேன். ஒருபோதும் சோர்வடைந்தது கிடையாது. எப்போதும் ஆற்றல்மிக்கவராகவும், நேர்மறை மற்றும் அனைவரையும் சிரிக்க வைப்பவர். மனோபாலா அவர்களின் மறைவு உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது.