அனைத்து சுக சௌகரியங்களுடன் நகர்புற அலுவலகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அன்றாட வேலையின் அழுத்தத்தைப்போக்க, பணியில் புத்துணர்வுடன் செயல்பட சுற்றுலா, பொழுதுபோக்கு என பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆண்டு முழுதும் கடினமான சூழல்களில், சலிப்பூட்டும் ஒரேமாதிரியான வேலைகளில் உழலும் தேயிலைக்காட்டுத் தொழிலாளர்களுக்கு அதுபோன்றதொரு மாற்று எவ்வளவு அவசியம்?
தொழிலாளர்களுக்குத் தொடர் வேலைக்கிடையே பொழுதுபோக்கு/ விளையாட்டுகளுக்கான வழிவகைகளை எஸ்டேட் நிர்வாகம் செய்யவேண்டும் என தோட்டத்தொழிலாளர் சட்டம், 1951ல் சொல்லப்பட்ட போதிலும், எஸ்டேட்டில் ஓரளவுக்கேனும் நடைமுறைக்கு வர ஆண்டுகள் 13 ஆனது. 1964ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, நாலுமுக்கு எஸ்டேட்டில் தொழிலாளர்களுக்குத் தனியாகவும், எஸ்டேட் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும். விளையாட்டுப் போட்டிகளை பிபிடிசி கம்பெனி நடத்த ஆரம்பித்தது. அதற்காக நாலுமுக்கு ‘புல்லுமொட்டை’யில் மைதானம் உருவாக்கப்பட்டது.
அங்கு நடந்த முதல் விளையாட்டுப் போட்டியில், பெண் தொழிலாளர்களில் எனது தாயாரின் தாயாரும், பள்ளி குழந்தைகளுக்கான போட்டியில் அப்போது நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனது தாயாரும் பரிசுகளைப் பெற்றனர். இதேபோல மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட்களிலும் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு, அந்தந்த எஸ்டேட்டுக்குள் மட்டும் ஆண்டுதோறும் விளையாட்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.
01.05.1985 முதல், உலகத்தொழிலாளர் தினத்தில், எல்லா எஸ்டேட் தொழிலாளர்களும் பங்கெடுக்கும் வகையில், காக்காச்சி எஸ்டேட் புல் மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஆரம்பித்தது கம்பெனி. எஸ்டேட்டிற்குள்ளேயே போட்டிவைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் காக்காச்சி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றனர்.
குதிரைவெட்டியை உள்ளடக்கிய ஊத்து, காக்காச்சியை இணைத்துக்கொண்ட மாஞ்சோலை, நாலுமுக்கு என மூன்று அணிகள் உருவாக்கப்பட்டன. நாலுமுக்கு அணிக்கு சிவப்பு, ஊத்துக்கு மஞ்சள், மாஞ்சோலைக்கு பச்சை என ஒவ்வொரு அணிக்கும் தனித்தனி வண்ணம் கொடுக்கப்பட்டது. தங்கள் அணிக்கான வண்ணத்தில், சட்டை/ கால் சட்டை/ பனியன்/ பாவாடை அணிந்து கொள்வார்கள் வீரர்கள்.
பெண்/ஆண் தொழிலாளர்களில் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், தொடர் ஓட்டம் (Relay Race) என தடகளப்போட்டிகளும், 45 வயது நிரம்பிய பெண்களுக்கு, பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஸ்பூனில் எலுமிச்சம் பழத்தை வைத்து ஓடுதல் போன்ற விளையாட்டுக்களும் நடத்தப்படும். கடைசியில், `ஓப்பன் டு ஆல்’ என்ற வகையில் எல்லா பெண்களும் கலந்துகொள்ளும் வகையில் தொலைதூர ஓட்டப்பந்தயமும் உண்டு. ஆண்களுக்கு நீளம்/உயரம் தாண்டுதல் போட்டிகளும் நடத்தப்படும். அதுபோலவே திறன்படைத்த (Skilled) தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.
வெற்றி பெற்றவர்களுக்கு முறையே 5, 3, 1 புள்ளி வழங்கப்பட்டு அதுகுறித்த விபரங்கள் மைதானத்தில் இருக்கும் கரும்பலகையில் உடனுக்குடன் பதிவுசெய்யப்படும். அதிக புள்ளிகள் பெறும் வீரர்கள் சாம்பியன்களாக கௌரவிக்கப்பட்டு, பரிசுபொருட்கள் போக தனியே வெள்ளிக்கோப்பை பெறுவார்கள். அதிக புள்ளிகள் பெரும் அணிக்கு பெரிய வெள்ளிக்கோப்பை வழங்கப்படும்.
1974ல் எஸ்டேட்டில் வேலைக்குச்சேர்ந்தது முதல், ஆண்டுதோறும் நாலுமுக்கில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கிவந்தார் எனது தாயார் இருதயமேரி. 1985ல் மே தின விளையாட்டு துவங்கிய இரண்டு நாளுக்குப்பிறகு எனது தங்கை பிறந்ததால் எனது தாயாரால் அதில் பங்கேற்க இயவில்லை. நான்கு குழந்தைகள் பெற்றபிறகு களமிறங்கியபோதும், 1986 முதல் இறுதியாக விளையாட்டுப் போட்டிகள் நடந்த 1998 வரையிலுமான 12 ஆண்டுகள், தன்னைக் காட்டிலும் வயது குறைந்த தொழிலாளர்களுடன் போட்டியிட்டு, எனது தாயார்தான் சாம்பியனாக இருந்தார். அதனால் அம்மா ஆண் தொழிலாளிகளில் சாம்பியனான கணேசன் மாமாவுடன் சேர்ந்து தீபம் ஏற்றி விளையாட்டினைத் துவங்கிவைப்பார்.
விளையாட்டுக்காக அம்மா தனியாக பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. முற்றத்தில் தண்ணீர்பிடிக்க செல்லும்போது கூட குறைவான வேகத்தில் ஓடிக்கொண்டே போவார். காலை 7.30க்குள் வேலைத்தளத்தை அடையவேண்டி, 6.50 மணிக்கெல்லாம் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குக் கிளம்பிவிடுவார்கள். எவ்வளவு தூரமான காட்டுக்கும் அம்மா 7.10க்குப் பின்னர்தான் கிளம்புவார். வீட்டிலிருந்து காடு வரைக்கும் ஓடியே செல்வது அம்மாவின் அன்றாட வழக்கம்.
ஆண் தொழிலாளர்களில் கணேசன் மாமாவும், திறன்படைத்த (Skilled) தொழிலாளர்களில் மைதீன் பிச்சை சித்தப்பாவும் கடைசி வரையிலும் சாம்பியன்களாக இருந்தார்கள். மைதானத்தில் இருக்கும் புல்லைப்பிடுங்கி கடித்தபடியே ஓடுவது கணேசன் ஸ்டைல். ஸ்கில்ட் தொழிலாளியான மைதீன் பிச்சை, உயரம் தாண்டுதல் போட்டியில், நேராகச்செல்லாமல், இடதுபக்கத்தில் இருந்து மேடைக்கு நேரெதிராக ஓடி, வளைந்து பின்னர் மேடையைப்பார்த்து ஒரு முக்கோணம் போல ஓடி வருவார்.. அவர் மட்டுந்தான் எஸ்டேட்டில், முன் பகுதியில் ஆணி வைத்த spike ஷூ அணிந்து ஓடியவர். அவர் உள்ளிட்ட வெகுசிலரைத்தவிர பெரும்பாலான தொழிலாளர்கள் வெறுங்காலுடன் தான் விளையாடுவார்கள்.
கல்லும், முள்ளும், குச்சிகளும் நிறைந்த தேயிலைக்காடுகளில் தினமும் செருப்பு அணியாத வெறுங்கால்களுடன் ஏறி, இறங்கும் தொழிலாளர்களுக்கு, காலணி இல்லாமல் விளையாடுவதில் சிக்கல் இருந்ததாகத் தெரியவில்லை. அன்றாட பயன்பாட்டுக்கே காலணியில்லாத தொழிலாளர்கள் ஆண்டில் ஒருநாள் நடக்கும் விளையாட்டுப் போட்டிக்காக பிரத்தியேகமாக காலணி வாங்கிக்கொள்ளாததில் வியப்பேதுமில்லை. 1990களின் துவக்கத்தில் ஒரு புகைப்படம் எடுப்பதற்காகும் தொகையான 15 ரூபாய் இல்லாததால் பலரிடம் விளையாட்டில் பங்கேற்ற புகைப்படம் இல்லாமல் போனது. .
அதிகாரிகளில் 1991 வரையிலும் ஆதிமூலம் சாம்பியனாக இருந்தார். ரிலேவில் பெரும்பாலும் நாலாவது ஆளாக ஓடும் ஆதிமூலம் அதிவேகமாக ஓடக்கூடியவர். மூன்றாவது ஓடிவருபவரின் கையிலிருக்கும் கம்பு அவர் கைக்குக் கடத்தப்பட்டவுடன், அதை வாங்கிக்கொண்டு சிறிதுதூரம் ஓடிய பிறகு, திரும்பிப் பார்த்து அவரைத் தொடமுடியாத தொலைவில் இரண்டாவதாக ஓடி வருபவரிடம் வா, வா என்று கையை அசைத்துக்கொண்டே, எல்லைக்கோட்டைப் பார்த்து பின்புறமாக ஓடுவார். அப்படியும் இரண்டாவதாக ஓடிவருபவரால் அவரை நெருங்கக்கூட முடியாது. அவ்வாறு ஓடுவது அவரது தனி பாணியாக இருந்தது. 1991ல் எஸ்டேட்டுக்கு புதிதாக வந்த, 19 வயதே நிரம்பிய ஆனந்த ராஜசேகர், அதிகாரிகள் பிரிவில் 1992 முதல் சாம்பியனாக இருந்தார். அவர் 1995ம் ஆண்டு வரை மாஞ்சோலை சார்பிலும், அதன்பிறகு நாலுமுக்கு சார்பிலும் விளையாடினார்.
தடகளப்போட்டிகள் தவிர்த்து ஆண்களுக்கு மட்டும் கைப்பந்து போட்டி நடத்தப்படும். அதில் ஆண் தொழிலாளர்கள், ஸ்கில்டு தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என எல்லோரும் சேர்ந்து ஒரே அணியில் விளையாடுவார்கள். குடியிருப்பு, வேலைத்தளம், வாழ்க்கை முறை என அனைத்தும் வேறுபட்டு இருப்பினும், ஒரு குழுவாக, சரிநிகர் சமமாக இவர்கள் ஒன்று கூடும் ஒரே தளம் இது தான்.
“எட்டடி” சசி, இஸ்மாயில், கருப்பையா டிரைவர், ஜமால் காக்கா போன்றவர்கள் நாலுமுக்கு எஸ்டேட்டில் வேலைபார்த்து வந்த துவக்ககாலங்களில் நாலுமுக்கு அணி, கைப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்தாலும், 1990களுக்குப் பிறகு, ஆரோக்கியசாமி, சீலன், ஜெபாஜெயா, ஜெயசிங், முஸ்தபா போன்ற தொழிலாளர்களின் வருகைக்குப்பிறகு, தினமும் சாயங்காலம் கைப்பந்தாட்டம் ஆடுவதை வழக்கமாக்கிக் கொண்ட மாஞ்சோலை அணி கைப்பந்தாட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றிபெற ஆரம்பித்தது.
புற்களை வெட்டி சமன் செய்தல், நேராகவும், வட்டமாகவும் சுண்ணாம்பால் கோடுபோடுதல், சுற்றிலும் கம்புகள் நட்டு அதில் கயிறுகட்டி பாதுகாப்பு வளையம் உருவாக்குதல் என விளையாடுவதற்கு ஏற்றவாறு காக்காச்சி மைதானம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி வாரத்தில் சீரமைக்க ஆரம்பிக்கும்போதே அனைவரையும் ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளும். மே ஒன்றாம் தேதி காலை 6 மணி முதல், அந்தந்த எஸ்டேட்டிலிருந்து, லாரி, ஜீப் மூலம் காக்காச்சிக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்வார்கள். சுமார் 1000க்கும் அதிகமானோர் அங்கு கூடி இருப்பார்கள்.
ஆண்டு முழுவதும் வெறிச்சோடிக் கிடக்கும் காக்காச்சி மைதானப்பகுதியில் நான்குபக்கமும் கம்புகள் ஊன்றி அதனைச்சுற்றிலும் சணல் சாக்குவைத்து உருவாக்கப்பட்ட தற்காலிக கடைகள் முளைத்துவிடும். அதில் ஐஸ், தின்பண்டங்கள், விளையாட்டு சாமான்கள், பலூன், குளிர்பானங்கள் என ஆண்டின் மற்ற நாட்களில் காணக்கிடைக்காத பலவும் விற்பனைக்கு வரும். காக்காச்சி திருவிழாக் கோலம் பூண்டு நிற்கும்.
நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டி ஏப்ரல் முப்பதாம் தேதியே நடந்துவிடும். தொழிலாளர்களுடன், எஸ்டேட் பள்ளி மாணாக்கர்களுக்கும் ஓட்டப்பந்தயம், ஸ்கிப்பிங், சாக்கு ஓட்டம் போன்ற போட்டிகளை நடத்துவார்கள்.
விளையாட்டுப் போட்டிகள் மதியத்துக்குள் முடிந்துவிடும். வெற்றி பெற்றவர்களுக்கு குரூப் மேனேஜர் / எஸ்டேட் மேனேஜர் பரிசுகள் வழங்குவார். அதன் பிறகு, விளையாட்டு வீரர்களுக்கும், அமைப்பாளர்களுக்கும் எஸ்டேட் அலுவலகத்தில் மட்டன் பிரியாணி பரிமாறப்படும். எவர்சில்வர் பாத்திரங்களே பரிசுகளாக வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும். எங்கள் வீட்டில் இருந்த பாத்திரங்களில் பெரும்பான்மையானவை எனது தாயார் பெற்ற பரிசுகளே. இன்றளவும் பெருமையுடன் அவற்றை பாதுகாத்தும், பயன்படுத்தியும் வருகிறார் எனது தாயார். .
எல்லா எஸ்டேட் மக்களும் ஒன்றுகூடும் இந்த விளையாட்டு நாளின் மூலம் புதிதாக பலர் அறிமுகமும், ஏற்கெனவே பரிச்சயமானவர்கள் மேலும் நெருக்கமும் ஆனார்கள். வருடம் முழுவதும் எஸ்டேட்வாசிகள் எதிர்நோக்கும் நாளாக மே தினம் மாறிப்போனது.
ஆனால் 1998 ஆகஸ்ட்டில் புதிய தமிழகம் கட்சி சார்பில் எஸ்டேட்டில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, தொழிலாளர்களிடையே ஏற்பட்ட பிளவுகள் மற்றும் அதிகரித்து வந்த கசப்புணர்வுகளின் காரணமாக, பெரும் பிரச்சினைகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு, மே தின விளையாட்டுத் திருவிழா 1999ல் கம்பெனியால் கைவிடப்பட்டது.
மே தின விளையாட்டு நிறுத்தப்பட்டு கால் நூற்றாண்டு கடந்துவிட்ட போதிலும், அது ஏற்படுத்திய மகிழ்வான தருணங்கள் இன்றளவும் எஸ்டேட் வாசிகள் மனதில் ஓர் சிறு ஏக்கத்துடன் பசுமையாய் அப்படியே உள்ளது.
புகைப்படங்கள்: மாஞ்சோலை அப்துல்லா, மாஞ்சோலை செல்வகுமார்