“ரஜினி சாரின் நட்பு எனக்குத் தேவையில்லை; ஏன்னா…" – ஆந்திர அமைச்சர் ரோஜா பேட்டி

சில நாட்களுக்கு முன்பு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒரு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டிப் பேசியது ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸினரை டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

குறிப்பாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜா, ரஜினியை ஜீரோ என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்க, ரஜினி ரசிகர்களிடம் பற்றிக்கொண்ட ரோஜா எதிர்ப்பு,

கண்டனங்களாகவும் மீம்ஸ்களாகவும் குவிந்துவருகின்றன. “நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்ததற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ‘தெலுங்கு பீப்பிள் வித் ரஜினிகாந்த்’ என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ரோஜா -ரஜினி

இதுகுறித்து ரோஜாவைத் தொடர்புகொண்டு பேசினேன், “என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் ரஜினி சார் கலந்துகொண்டதில் தவறில்லை. ஆனா, ரஜினிகாந்த் அரசியல் தெரியாம பேசினதுதான் தவறு. என்.டி.ஆர் உயிரோடு இருக்கும்போது அவரை சந்திரபாபு நாயுடு மதிக்கவே இல்லை. அவரது கட்சியையே இவர் கைப்பற்றிவிட்டார். அந்தளவுக்கு என்.டி.ஆருக்கு துரோகம் இழைத்தார் சந்திரபாபு நாயுடு. அவரது, மரணத்துக்குக்கூட இவர்தான் காரணம். இப்படிப்பட்டவரை என்.டி.ஆர் மேலிருந்து ஆசீர்வாதம் செய்வார் என்று ரஜினி சார் பேசியுள்ளார். ரஜினி வரலாற்று பின்னணிகளை தெரிந்து பேசவேண்டும். நான் ரஜினி சாரோட ஃபேன். அவர்கூட நடிச்சிருக்கேன். அந்த மரியாதையெல்லாம் இருக்கு. ஆனா, அவர் ஒரு கொள்ளைக்காரருக்கு சப்போர்ட் பன்றதை என்னால ஏத்துக்கல முடியல.

பொண்ணு கொடுத்த மாமாவையே ஏமாற்றியவர் சந்திரபாபு. கோட்சேவைவிட மோசமான ஆளுன்னு என்.டி.ஆரே சந்திரபாபு நாயுடுவை சொல்லியிருக்காரு. அப்படிப்பட்டவருக்கு எப்படி இவர் சப்போர்ட் பண்ணிப் பேசலாம்? ரஜினி சாரை எத்தனை பேரு ஃபாலோ அப் பன்றாங்க? எங்க போறோம் என்ன பேசுறோம்ன்னு புரிஞ்சு பேசணும். அவர், இப்படி பேசினது யாருக்குமே பிடிக்கல.

ரஜினியுடன் ரோஜா

சமீபத்துல மீனாவோட ஃபங்ஷன்ல ரஜினி சாரை மீட் பண்ணினேன். சுற்றுலாத்துறையை சூப்பரா பன்றீங்க… போல்டா செயல்படுறீங்கன்னு பாராட்டினாரு. 20 வருடத்துக்குமேல அரசியலில் இருக்கேன். ஒரு பொண்ணா எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேன். ரெண்டு தடவை தோற்றிருக்கேன். ரெண்டு தடவை ஜெயிச்சிருக்கேன். இப்போ, மினிஸ்டர் ஆகியிருக்கேன். ஆனா, ரஜினி சார் மாதிரி நான் அரசியல் வர்றேன்னு சொல்லிட்டு வராம ஓடியா போனேன்? அவரால அரசியலுக்கே வரமுடியல. அப்படியிருக்கும்போது அவர் எதுக்கு அரசியல் பேசணும்?

நான், ஒரு கதாநாயகியா நடிச்சிக்கிட்டிருந்தா நடிப்பை மட்டும்தான் பார்த்துக்கிட்டிருப்பேன். இப்படியெல்லாம், அரசியலில் தெரியாத விஷயங்களை பேசமாட்டேன். நான் அரசியலில் இருக்கேன். ரஜினி சார் இதை சரிசெய்துகொள்ள சொல்லித்தான் ஆகணும். இந்தியாவுல சிறந்த முதல்வரா எங்க ஜெகன் மோகன் அண்ணன் இருக்காரு. இவரு ஈஸியா 2024-தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை ஜெயிக்க வைங்கன்னு சொல்றார். இப்படி, பேசினா ஜனங்க எங்களைத்தானே தப்பா எடுத்துக்குவாங்க? அதனாலதான், நான் கேக்குறேன்” என்கிறவரிடம், “ரஜினியைப் பற்றி தவறாக விமர்சிப்பவர்கள் ரஜினியிடம் மன்னிப்பு கேட்கணும்னு சொல்லியிருக்காரே சந்திரபாபு நாயுடு?” என்று நாம் கேட்டபோது,

“நாங்க என்ன தப்பு பண்ணினோம் மன்னிப்பு கேட்பதற்கு? ரஜினி சாரை அழைத்து வந்து திட்டு வாங்க வெச்சதுக்கு, சந்திரபாபு நாயுடுதான் ரஜினி சார்க்கிட்ட மன்னிப்பு கேட்கணும். ரஜினி சாரோட நட்பு போனாலும் பரவாயில்ல. அப்படியொரு நட்பும் தேவையுமில்ல. நாங்க தப்பு பண்ணல. தப்பு பண்ணினது அவர்தான். நான் அதை சரிப்பண்ணிக்க சொல்றேன். எனக்கு என்ன அவர்க்கூட சண்டை போட்டா கிரீடமா கிடைக்கப்போகுது? அவர் பொய் பொய்யா பேசுறார். அரசியலுக்கே வராதவர் இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்று ஆக்ரோஷமாக பேசுபவரிடம் “இதுபற்றி ஜெகன் மோகன் ரெட்டி உங்களிடம் பேசினாரா?” என்று கேட்டபோது, “அவர் எதுக்கு இதுபற்றி பேசணும்? அவர் என்ன தப்பு பண்ணினார்? அவர் இதுபற்றி பேசணும்னு அவசியமே இல்ல. சந்திரபாபு நாயுடு பேச்சை கேட்டுக்கிட்டு வந்து ஆந்திராவுல தெரியாம பேசிட்டேன்னு ரஜினி சார்தான் ஆந்திரா மக்கள்கிட்ட மன்னிப்பு கேட்கணும். அவரோட கருத்தை வாபஸ் வாங்கணும்” என்பவரிடம்

ரஜினி – ஆந்திர அமைச்சர் ரோஜா

“ரஜினிக்கு எதிராக நீங்கள் பேசியதால் உங்களை ஆபாசமாக மீம்ஸ் சித்தரித்து பரப்பி வருகிறார்களே?”

“ரஜினி ரசிகர்கள், சந்திரபாபு நாயுடு கட்சிக்காரர்களும் ஒரு பெண்ணுக்கு எந்தளவுக்கு மதிப்பு கொடுக்குறாங்கன்னு இதிலேயே தெரிஞ்சுக்கலாம். ஒரு பெண் அரசியல் பேசக்கூடாது, வளரக்கூடாது நினைக்கிறவங்கதான் இப்படியெல்லாம் கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவாங்க. இப்படியெல்லாம், பண்ணக்கூடாதுன்னு ரஜினி சார்தான் அவரோட ரசிகர்களுக்கு அறிக்கை வெளியிட்டு கட்டுப்படுத்தணும். அவரு அமைதியா இருக்கக்கூடாது.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.