புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை தொடர்ந்து பொது சிவில் சட்டம் மீது பாஜக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரத்தை வரும் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக முன்னிறுத்தும் வாய்ப்புகள் தெரிகின்றன.
பாஜகவின் பழைய பெயரான ஜனசங்கம் காலம் முதல் மூன்று முக்கிய விவகாரங்கள் அதன் கொள்கைகளாக முன்னிறுத்தப்படுகின்றன. அயோத்தி ராமர் கோயில், காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்குதல், பொது சிவில் சட்டம் ஆகியவை அந்த விவகாரங்கள் ஆகும்.
தற்போது காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதுடன், பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலும் கட்டப்பட்டு வருகிறது. இதனால், பாஜகவிடம் மத ரீதியாக எஞ்சியிருப்பது, பொது சிவில் சட்டம் மட்டுமே. இது அமலுக்கு வந்தால் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் அனைத்து தனிச்சட்டங்களும் முடிவுக்கு வந்து விடும்.
எனவே பொது சிவில் சட்டம் மூலம் தனது இந்து வாக்குகளை ஒன்றிணைத்து 2024 மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிடுவதாகத் தெரிகிறது.
2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி
இதற்கு முன்னோடியாக உத்தராகண்ட், இமாச்சலபிரதேசம் மற்றும் குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களில் பொது சிவில் சட்டத்தை பாஜக முன்னிறுத்தியது. இதில் இமாச்சல பிரதேசம் தவிர மற்ற 2 மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.
இதன் காரணமாக பாஜகவின் கர்நாடகா தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் இடம் பெற்றுள்ளது. இந்த வருடம் வரும் அனைத்து மாநில தேர்தல்களிலும் பாஜக சார்பில் பொது சிவில் சட்டம் முன்னிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜக தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “ஜனசங்கம் காலம் மற்றும் 2014, 2019 தேர்தல்களின் அறிக்கைகளிலும் பொது சிவில் சட்டம் தொடர்ந்து இடம் பெறுகிறது. என்றாலும் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்து வாக்குகளை மட்டும் குறி வைத்து செல்லும் எங்கள் கட்சிக்கு இந்துக்கள் மீதான ஒரு பிரச்சினை அவசியமாகிறது.
இதனால், 2024 மக்களவை தேர்தலில் பொது சிவில் சட்டம் முக்கிய பிரச்சினையாக முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன” என்று தெரிவித்தனர்.
உத்தராகண்ட், குஜராத் தேர்தல் வெற்றிக்கு பிறகு அங்குள்ள பாஜக அரசுகள் சார்பில், பொது சிவில் சட்டத்தை அமலாக்குவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தை பாஜக ஆளும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களும் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன. முன்னதாக நாடாளுமன்ற நிலைக்குழு சார்பிலும் தனிச்சட்டங்களை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைகள் கேட்கப்பட்டிருந்தன.
இதற்காக, தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகளும் பரிந்துரைகள் அளிக்க குழுக்களை அமைத்திருந்தன. இதற்கு சாதகமாக, தனிச்சட்டங்களால் பெண்களுக்கு சம உரிமை பேணப்படுவதில்லை என்ற புகாரையும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இதனிடையே, பாஜக மாநிலங்களவை எம்.பி.யான கிரோரி லால் மீனா, கடந்த ஆண்டு பொது சிவில் சட்டம் மீதான தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தினார்.
இதன் மீது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தனது பத்திரிகையில் செய்திக் கட்டுரை எழுதியது. அதில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்கள் ஆகியவை தங்கள் சொந்த நிர்வாகத்தில் செயல்படும்போது, இந்துக்களின் கோயில்களை மட்டும் அரசு பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தது. இது மிகவும் கவனிக்க வேண்டிய தகவலாகக் கருதப்படுகிறது.
இதுபோன்ற விவகாரங்களை பாஜக தங்களுக்கு சாதகமாகக் கொண்டு பொது சிவில் சட்டத்தை 2024 மக்களவை தேர்தலுக்கான அடுத்த அரசியல் ஆயுதமாக்கும் வாய்ப்புகள் கூடி வருகின்றன.