வகுப்பறைக்குள் மாணவன் வெறிச்செயல் காவலாளி, 8 மாணவர்கள் சுட்டு கொலை| Inside the classroom, the student went berserk, 8 students were shot dead

பெல்கிரேட்,-செர்பியாவில் பள்ளி மாணவன் ஒருவன், திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி சக மாணவர்கள் எட்டு பேரையும், பள்ளி காவலாளியையும் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் திடீரென தன் வகுப்பாசிரியரையும், சக மாணவர்களையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத்துவங்கினான்.

அதிர்ச்சி அடைந்த பல மாணவ – மாணவியர் மேசைகளுக்கு இடையே மறைந்து உயிர் தப்பினர்.

எனினும், இச்சம்பவத்தில் எட்டு மாணவ – மாணவியர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது, துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை தடுக்க வந்த பள்ளி காவலாளியும் பலியானார். மேலும், ஆறு மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய அம்மாணவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இறந்தவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி வெஸ்லின் மிலிக் கூறியதாவது:

தாக்குதல் நடத்திய மாணவனின் பெயர் கெக்மனோவிக், 14. நன்கு படிக்கக்கூடிய மாணவனான இவன், யாரிடமும் பேசாமல் அமைதியான சுபாவம் உடையவன் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தின்போது அவன், தன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து, சக மாணவ – மாணவியரை நோக்கி சுட்டுள்ளான்.

மேலும், யார் யாரை சுட வேண்டும் என ஒரு மாதமாக திட்டம்தீட்டி பட்டியலுடன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளான். எனவே, அனைத்து கோணங்களிலும் எங்களின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.