திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்ட வருகின்றனர். மாதம் தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்களும், சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் பல லட்சம் பேர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நாளை 4ஆம் தேதியான வியாழக்கிழமையான இரவு 11.59 மணிக்கு தொடங்கி மறுநாள் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.33 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் 5ஆம் தேதி பவுர்ணமி கிரிவலம் செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகம் முழுவதிலும் இருந்து 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை நள்ளிரவு முதல் நாளை மறுநாள் வரை பவுர்ணமி உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 1000 பேருந்துகளை இயக்கவும், சென்னை, கும்பகோணம், சேலம், கோவை, மதுரை போக்குவரத்து கழகங்களின் வாயிலாக 1500 கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளையும், நாளை மறுநாளும் வழக்கமான பேருந்துகளுடன் திருவண்ணாமலைக்கு 4500 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த பேருந்துகள் சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரத்தில் இருந்தும் விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், தருமபுரி, ஓசூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை கோயம்பேடு, தாம்பரம் பேருந்து நிலையங்களில் சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக 15 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.