இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா, ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ள மனோ பாலா தமிழில் சுமார் 700 படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார் மனோபாலா. சமீபத்தில் நடிகர் மனோபாலாவுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.
கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த மனோ பாலா இன்று காலமானார். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மனோபாலாவின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிக்ரகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையிர் முதல்வர் ஸ்டாலின் மனோபாலா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சிறந்த இயக்குநராக மட்டுமின்றி அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
சமீபத்தல் எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், பிரபல திரைப்பட இயக்குனரும், சிறந்த நடிகருமான மனோபாலா அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் @BJP4Tamilnadu
சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மனோபாலாவின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் , கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோபாலாவின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை அவரது உடல் ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.