Manobala: என் அன்பு நண்பர்.. மனோபாலாவின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.. விஜயகாந்த் உருக்கம்!

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டிருந்தவர் மனோபாலா. 69 வயதான மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை மனோபாலா திடீரென மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மனோபாலா ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் மனோபாலா.

யூட்யூப் சேனலையும் நடத்தி வந்த மனோபாலா, பல சினிமா பிரபலங்களை பேட்டிக் கண்டுள்ளார். மனோபாலாவின் திடீர் மரணம் தமிழ் சினிமாவை உலுக்கியுள்ளது. மனோபாலாவின் மறைவுக்கு தேமுதிக தலைவரும் நடிகருமான

இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது, எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

எண்ணற்ற திரைப்படங்களில்‌ நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. என தெரிவித்துள்ளார்.

இதேபோல் பாமக தலைவர்

ராமதாஸும் மனோபாலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழ்திரைப்பட இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார் என்பதை அறிந்து வருத்தம் அடைந்தேன். தமிழ்த்திரையுலகின் சமூக பொறுப்புமிக்க படைப்பாளிகளில் அவரும் ஒருவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், நண்பர்கள், தமிழ்த்திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.